இலங்கை

சிறைச்சாலைகளில் அராஜகம் ; ஆணையாளர் நாயகம் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாதிருப்பதே இதற்கு காரணம்

இலங்கை சிறைச்சாலைகளில் மிகவும் அராஜகமான சூழ்நிலையே உருவாகியுள்ளது. சிறைச்சாலைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டிய ஆணையாளர் நாயகம் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணமாகும் என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் சிறைச்சாலை அமைப்பு முறை தொடர்பில் மிகக் கடுமையான ஆபத்தான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இரண்டு பாரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை சிறைச்சாலைகளில் மிக அராஜகமான சூழ்நிலையே உருவாகியுள்ளது. ஆனால், இந்த நிலைமைக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சிறைச்சாலை ஆணையாளர் ஒருவர் இல்லை.

இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு என ஆணையாளர் நாயகம் ஒருவர் இல்லை. நமது நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமே உள்ளது. அந்த முக்கியமான பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. ஒரு வருடமும் இரண்டு மாதங்களாகியும் அந்தப் பதவிக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. அதாவது, உடல் உள்ளது, தலை இல்லை.

இதற்கு முன்னர் அப்பதவியில் துஷார உபுல்தெனிய பதவி வகித்தார். அவரது பதவி இடைநிறுத்தப்பட்டது. துஷார உபுல்தெனிய இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்துக்குச் சென்று, தன்னை நீக்குவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என முறைப்பாடு செய்தார். அவரின் முறைப்பாட்டை விசாரணை செய்த ஆணைக்குழு, அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு, ஆணையகத்தின் தலைவரான முன்னாள் மேல்நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. தேஹிதெனிய அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அந்த உத்தரவு எள்ளளவும் மதிக்கப்படவில்லை. அமைச்சின் செயலர் மிகவும் தன்னிச்சையாக, மனித உரிமை ஆணைக்குழு என்ன சொன்னாலும் தான் அதனைச் செய்யப்போவதில்லை எனக் கூறினார். அப்படியானால், இந்த நாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஒன்று இருப்பதன் அர்த்தம் என்ன? முன்னாள் பிரதம நீதியரசரின் தலைமையில் செயற்படும் அந்த ஆணைக்குழுவின் உத்தரவுகள் எவையுமே மதிக்கப்படாவிட்டால், அந்த ஆணைக்குழு இருப்பதனால் என்ன பயன்? என கேட்கிறோம்.

14 மாதங்களாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நியமனம் வழங்கப்படவில்லை. பதில் நபர்களே நியமிக்கப்படுகின்றனர். அப்படியானால் யார் பொறுப்புக்கூறுவது? இலங்கைச் சிறைச்சாலைகளில் முழுமையாக அராஜக நிலைமையே நிலவுகிறது. இந்த நிலையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இரண்டு மாதங்களுக்குள்ளேயே இத்தகைய மிகக் கடுமையான இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான அசாதாரண சூழ்நிலையிலும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாமல் இருக்கும்போது எவ்வாறு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என கேட்கிறோம்.

இப்போது சிறைச்சாலைகளின் இந்த நிலைமை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது. சிறைச்சாலைகளில் சுமார் 41,500 கைதிகள் உள்ளனர். ஆனால், சிறைச்சாலைகளில் 11,000 பேருக்கு மட்டுமே வசதிகள் உள்ளன. அப்படியானால், நான்கு மடங்கு அதிகமான கைதிகள் உள்ளனர். ஆகவே, இந்த நெருக்கடி காரணமாகவே பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

எனவே, இந்த நிலைமைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு ஆரம்பமாக ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவுகளை ஏன் இவ்வாறு துச்சமாக மதித்து, நிராகரிக்கிறீர்கள்? இந்த முரட்டுத்தனமான மனப்பாங்கை இத்துடன் கைவிடுமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button