நீதியரசர்களின் ஓய்வு வயது; மகாநாயக்க தேரர்கள் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு; ஜனாதிபதிக்கு கடிதம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து, மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக மல்வத்து மகாநாயக்க தேரர் தன்னிடம் கூறியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது ராஜீவ் அமரசூரிய மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்திற்கு இதை முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் எமக்குத் தெளிவுபடுத்தினார். மல்வத்து, அஸ்கிரிய, ராமஞ்ஞ மற்றும் அமரபுர ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இந்த அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என கூறி ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனை மல்வத்து மகாநாயக்க தேரர் என்னிடம் கூறினார் என்றார்.
![]()