இலங்கை

முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை; முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் பிடித்திருக்கும்

முன்னாள் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவரெனக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதிக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

“ஐந்து கோடி ரூபா நஷ்டஈடு செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி ரூபா நஷ்டஈடு செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்றால், 10 கோடி ரூபா நஷ்டஈடு செலுத்திய தமக்குத் தண்டனை கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அவர் சிந்திப்பார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நினைத்துப் பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. இதனை எண்ணி அவரது குடும்பத்தினரும் மிகவும் வேதனைப்படுவார்கள். ஆனால், மறுபக்கம் பார்க்கும்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது 269 அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அந்தச் செயலை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியமையினாலேயே அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே, ஒருபக்கம் அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து வேதனைப்பட்டாலும், தேவாலயங்களில் வழிபட்டுக்கொண்டிருந்த 269 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மறக்க முடியாது. அவர் தனது கடமையைச் சரிவரச் செய்யாததன் காரணமாகவே அவருக்கு இம்மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்குக் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. பாதுகாப்புச் செயலாளரோடு இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக் கோடி ரூபா நஷ்டஈடு செலுத்தியவர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஐந்து கோடி ரூபா நஷ்டஈடு செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி ரூபா நஷ்டஈடு செலுத்தியவராக இருக்கின்றார், அவர் முன்னாள் ஜனாதிபதி.

ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை எனும்போது, 10 கோடி செலுத்திய தமக்குத் தண்டனை கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றே அவர் இப்போது சிந்திப்பார்.

அதுமட்டுமன்றி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளாக இருந்தவர்களில் இருவர் உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கும் இப்போது கலக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கும் என்ன நடக்குமோ என்று சிந்திப்பார்கள்; ஏனெனில் அவர்களுக்கும் தண்டனைக்கான வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.

இதற்கும் மேலாக, இதனை இயக்கிய முக்கிய சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது நிச்சயமாகக் காய்ச்சல் பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால், தமக்கும் தண்டனை கிடைக்கக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றே அவர் சிந்திப்பார்” எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button