இலங்கை

நீர்கொழும்பு சம்பவம் போலன்றி மகர சிறைச் சம்பவம் முற்றிலும் வேறுபட்டது!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டிருப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்ட போதிலும், மகர சிறைச்சாலை சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட வெறுப்பும் ஆத்திரமுமே இந்த பதற்ற நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சகல சிறைச்சாலைகளுக்குள்ளும் போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அதற்குள்ள வெறுப்பு மற்றும் கோபம் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கலாம். ஆரம்பகட்ட அறிக்கை கிடைத்த பின்னரே இது குறித்து துல்லியமாகக் கூற முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த சொத்துக்களை புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைதிகள் தற்போது தமது சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கி, சிறைச்சாலையின் நாளாந்த நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button