இலங்கை

ஜனாதிபதியை இன்று 6 கட்சி கூட்டு சந்திக்கிறது

சொந்தமாக காணி உள்ள வடகிழக்கு மக்களுக்கும் சொந்தமாக காணியில்லாத மலையக மக்களுக்கும் ஒரே பிரச்சினையாக காணிப்பிரச்சினையே உள்ளது.பல தசாப்த காலங்களாக இந்த காணிப்பிரச்சினை காணப்படுகின்றது என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்ககாவை சந்திக்கவுள்ள நிலையில் அவரிடம் எமது பிரதான கோரிக்கையாக இந்த காணிப்பிரச்சினையை முன்வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் ஆறாவது நிறைவு விழா காவத்தை கிரேன்ட் எமரல்ட் உல்லாச உணவகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி சண்முகம் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வடகிழக்கு மக்களின் சொந்தக் காணிகளை இராணுவத்தினரும் இதர தரப்பினரும் கைப்பற்றி வைத்துக் கொண்டு அதனை விடுவிக்க மறுக்கின்றனர்.அதேநேரம் மலையக மக்களுக்கு காணிகளை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். மொத்தத்தில் இலங்கையிலுள்ள வடகிழக்கு மக்களும் மலையக மக்களும் காணிப்பிரச்சினை காரணமாக வாழ வழியின்றி தவிக்கின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு நாட்டிலிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு 6 தமிழ் பேசும் கட்சிகள் ஒன்று சேர்ந்து நாட்டின் தலைவரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை இன்று காலை சந்தித்து எமது பிரதான கோரிக்கையான காணிப்பிரச்சினையை முன்வைக்கவுள்ளோம். இதனை தவிர அதிகார பகிர்வு மற்றும் மாகாணசபை தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளளோம்.

இன்று (03) மாலை எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து எமது மேற்படி கோரிக்கைகள முன்வைக்கவுள்ளோம்.

ஓன்றிணைந்துள்ள ஆறு கட்சிகளிடம் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இதில் தவறேதும் கிடையாது.

மலையக மக்களுடன் பின்னிப் பிணைந்ததுதான் எமது தமிழரசுக் கட்சியாகும். 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த பின்னர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருந்த இலங்கையின் பெரும்பான்மையின ஆட்சி,1949 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை சட்டமும் இந்திய-பாகிஸ்தான் சட்டமும் இயற்றப்பட்டதால் மலையக மக்களின் பிரஜா உரிமையை இழந்தனர்.

எண்ணிக்கையில் பெரும்பான்மையின ஆட்சி என்றுமே சிறுபான்மையின் மக்கள் மீது அவர்களின் கொள்கைகளை திணிப்பது வழக்கம்.

இதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் துணை போனது.இதனை எதிர்த்து அக்கட்சியின் உப தலைவரான தந்தை செல்வா என்றழைக்கப்படுகின்றன எஸ்.ஜே.வி செவ்வநாயகம் அக்கட்சியிலிருந்து வெளியேறி பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஆ. என். நாகநாதன் மற்றும் வன்னியசிங்கம் ஆகியோருடன் இணைந்து இலங்கை தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்.

தமிழரசு கட்சி ஆரம்பிப்பதற்கு, மலையக மக்களின் பிரஜா உரிமை நீக்கம்தான் பிரதான காரணம் என்பதனை தெரிவிக்கின்றேன். அப்போது 8 இலட்சம் மலையக மக்களின் பிரஜா உரிமை நீக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளது. வடகிழக்கு , மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு எமது தனிப்பட்ட பிரச்சினைகளை மறந்து,தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்காக 6 கட்சிகளும் இணைந்துள்ளன. இது கூட்டணியுமல்ல,கட்சியுமல்ல என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button