பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை என பிரதமர் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் அதிகாரப் பகிர்வை அதிகரிக்கும் தனது அரசாங்கத்தின் திட்டம், நாட்டிற்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான தேவையை மேலும் வலுப்படுத்துவதாக பிரதமர் அன்டி பே(ர்)னாம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், பிரித்தானியாவின் தற்போதைய அரசியல் அமைப்பில் பாரியளவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இல்லாத உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக உருவாகி வந்த சட்டங்கள், மரபுகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே தற்போது நாட்டின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிராந்தியத் தலைவர்களுக்கு அதிக நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் புதிய அதிகாரப் பகிர்வுத் திட்டம், நாட்டில் ஒரு முறையான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான தேவையை அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பிரித்தானியாவில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு அமைப்பை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் பல்வேறு பிராந்தியங்களுக்கு பொருந்தும் வகையில், அதிகாரப் பகிர்வுக்கான ஒரு முறையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பொருளாதார வளர்ச்சியையும், சமமான வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()