கட்டுரைகள்

பதிற்றுப்பத்து பாடிய அடிப்படையான மானுடத் தேவைகள்…. கட்டுரைத் தொடர் – 11 …. அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா

புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித் தொடங்கி தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்கையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், “அண்ணாயிசம் என்பது என்ன?” எம்.ஜி.ஆர் சொன்னார், “ஒழுகாத கூரை, கிழியாத ஆடை, ஆடாத சுவர் இதுதான் அண்ணாயிசம்.”

இந்த அண்ணாயிசம் சமீபத்தில் நினைவுகூரப்பட்டது. அஇஅதிமுக கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார். அவருக்கு அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அவரிடம் கேட்டார்கள், “தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உங்களுக்குப் பிடித்த கொள்கை எது?” செங்கோட்டையன் அவர்கள் எம்.ஜி.ஆர் சொன்ன அண்ணாயிசத்தைச் சொன்னார். அண்ணாயிசம் என்பது வீடும் ஆடையும் மட்டும்தானா? “இரண்டு படி இலட்சியம், ஒரு படி நிச்சயம்” என்கிற கொள்கையே அவர் தோற்றுவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்குச் சூத்திரமாக அமைந்தது.

பசியாற்றுதல் என்பது அண்ணாயிசம் மட்டுமல்ல, கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கை இது. ‘ஒரு படி நெல் கூலி உயர்வும் சாணிப்பால் சவுக்கடியும்’ பசியாற்றுதலின் அடிப்படையில் விளைந்தவை.

அண்ணாயிசத்துடன் காந்தியிசம் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. காந்தியிசம் ஆடையின் அடிப்படைத் தேவையைப் பேசுகிறது. காந்தியடிகள் பகட்டான ஆடை அணிந்தவர். அவர் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கையில் உடுத்தும் உடையில் மாற்றம் நிகழ்ந்தது. உழைக்கும் மக்கள் அரைகுறையான ஆடையிலிருக்கையில் நான் பகட்டு ஆடையிலிருக்கிறேனே என்று தனது உடையின் அளவைக் குறைத்துக்கொண்டார். இந்திய மக்கள் உடையில் தன்னிறைவு பெற வேண்டும் என்பது காந்தியின் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற வேண்டிய இடத்திலும் தமிழகம் இருக்கிறது.

உணவு, உடை, உறைவிடம் மூன்றும் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களின் அடிப்படை தேவைகள். இந்த மூன்றும் தமிழக மக்களிடம் எப்பொழுது அடிப்படை தேவையானது?

சங்க இலக்கியம் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றையும் அடிப்படை தேவையாகக் கருதி பாடியுள்ளது. குமுட்டூர்க் கண்ணனார் எனும் புலவர் தன் பாடலில் ‘தொல்பசியுழந்த பழங்கண்’ என்று பசியையும் ‘நூலாக் கலிங்கம்’ என்று உடையையும் ‘குன்று பல நீந்தி வந்து அவர் இறுத்த இரும்பேர்’ என்று உறைவிடத்தையும் பாடியுள்ளார். சேரலாதன் நெடுஞ்செழியனின் மறம் வீங்கு பல் புகழைப் பாடும் பாடல் இது.

தமிழக அரசியலில் முரசுக்கு ஓர் இடம் உண்டு. முரசு போர் வெற்றியின் சின்னம்.  வெற்றிக்குப் பிறகு ஒலிப்பதே முரசு. அதற்கு முன் ஒலிப்பது வெறும் தம்பட்டம் என்பது ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வசனம். சோழ, பாண்டிய மன்னர்கள் போர் வெற்றியை முரசுக்கொட்டி கொண்டாடினார்கள். ஆனால் சேர மன்னன் சேரலாதன் அப்படியன்று, போரில் வென்று பகையரசர் நாட்டின் காவல் மரமான கடம்ப மரத்தை அடியோடு வெட்டிவந்து அதில்  முரசு செய்து கொட்டினான்.

தமிழக அரசியல் பரப்புரைக் களத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களைச் சிங்கமாகவும் யானையாகவும் கருதிக்கொண்டு முழங்குபவர்கள் உண்டு. தமிழக அரசியல் கட்சி கொடிகளில் சிங்கம் இருந்து யானை இல்லாமலிருந்தது. யானை இடம் பெற்றுவிட்டது. யானை, சிங்கம் இரண்டில் பலமானது யானையா? சிங்கமா? புலவர் குமட்டூர்க் கண்ணனார் சிங்கத்தைச் சொல்கிறார். “பிடரிமயிர் கழுத்தினையும் நீண்ட கூர்மையான நகங்களையும் உடைய சிங்கம் திரிகின்ற மலைகளில் யானை முதலிய விலங்குகள் மனம் நடுங்கியே வாழும். அப்படியாக சேரலாதன் வாழுகிற நாட்டைச் சுற்றிலும் வாழும் பகையரசர்கள் தூக்கமில்லாமல் நடுங்குகிறார்கள்.”.

சிங்கம் யானையை விடவும் பலமான விலங்கு. ஆனால் யானை கருணை கொண்டது. பதிற்றுப்பத்தில் இப்படியாக ஓரிடம் வருகிறது. “இளமையான களிற்றுயானை கன்றுடன் கூடிய பிடியுடன் செல்கிறது. பிடியை வரிகளுடைய வண்டுகள் வட்டம் கட்டி மொய்க்கின்றன. ஆண் யானை மணம் வீசும் காட்டுமல்லியைப் பறித்து வண்டுகளை விரட்டுகிறது.” ஓர் ஆட்சியாளன் பிரச்சனைகளைக் கையாள வேண்டி உத்தி இது.

யானையின் கருணையை இலங்கை டிட்வா புயலில் ஏற்பட்ட சீற்றத்தில் பார்க்க முடிந்தது. வன உயிரிகளை வெள்ளப்பெருக்கு அடித்துச்செல்ல ஒரு சிங்கத்தை ஒரு யானை தன் முதுகில் ஏற்றிவந்து கரையேற்றி விட்டது. அப்படியென்றால் ஓர் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டியது சிங்கம் போன்ற வீரம் அல்ல, யானையைப் போன்ற கருணையும் அரவணைப்புமே.

சேரலாதனின் உதவியை நாடி ஒரு புலவன் தன் சுற்றத்தாருடன் வருகிறான்.  அவர்களது ஆடை மழையில் நனைந்து பருந்தின் சிறகைப் போலவும் மண்ணால் அரிக்கப்பட்ட கந்தையாகவும் இருக்கின்றன. கிழிந்த ஆடை மழையில் நனைந்த பருந்தின் சிறகுக்கு உவமையாக சொல்லப்படுகிறது.

கிழிந்த ஆடையுடன் வந்த சுற்றத்தார்களுக்கு சேரலாதன் உடை கொடுக்கிறான். அந்த உடை மனிதனால் நூற்கப்படாத நூலாகிய பட்டு நூலினாலானதாக இருக்கிறது.  பட்டு ஆடை என்பது மென்மெல்லிய ஆடை. இடுப்புக்கும் தோளுக்கும் கனக்காத ஆடை. அத்துடன் அவர்கள் தங்கிக்கொள்ள உறைவிடம் கொடுக்கிறான்.

அவர்களின் பசி பல நாள் உணவின்மையால் உண்டான கொடும்பசி கொண்டதாக இருக்கிறது. கொடும்பசியைப் புலவர் ‘தொல்பசியுழந்த பழங்கண்’ என்கிறார். பழங்கண் என்பது துன்பம். சேரன் அவர்களுக்கு உணவு கொடுக்கிறான். அந்த உணவு மைஊன் பெய்த வெண்ணல் வெண் சோறாக இருக்கிறது. மைஊன் என்பது ஆட்டு இறைச்சி. வெண்ணல் என்பது மலை நெல். இப்படியாக பதிற்றுப்பத்து உணவு, உடை, உறைவிடம் எனும் மூன்று அடிப்படை தேவைகளைப் பாடுகிறது.

தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் இந்த மூன்றையும் வாக்குறுதிகளாக வைக்குமளவிற்கே தமிழக மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. ஆயினும் முன்பு போல பொத்தம்பொதுவான வாக்குறுதிகளாக அல்லாமல் மேம்படுத்தப்பட்ட வாக்குறுதியாக வைக்கவேண்டியுள்ளது.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிக்கைக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளில் தோளில் அணியும் துண்டும் பெண்கள் அணியும் மேலாடையும் வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. சாதிய பாகுபாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் மிக நீண்ட காலம் தோளில் துண்டு அணிய முடியாத நிலை இருந்தது. கம்யூனிஸ்ட்கள் தோளில் அணியும் சிவப்புத் துண்டு ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடே. இன்றும்கூட சாதிக் கட்டுமானம் இறுக்கமாக உள்ள ஊர்களில் தோளில் துண்டு அணிய முடியாத நிலை இருக்கிறது. இந்தப் பாகுபாட்டை களைய வேட்டியோடு துண்டும் வழங்கப்பட வேண்டும்.

அண்ணாயிசம் சொல்லும் ஆடாத சுவரை விடவும் ஆபத்தாக இருப்பது ஓலைக் கூரைகள். சாதியப் பிரச்சனைகளில் முதலில் தீய்க்கு இரையாவது குடிசைகள்தான். ஆகவே குடிசைகள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற உறைவிடம் என்று அறிவிக்கப்பட வேண்டும். இதற்குள் கால்நடைகளுக்கான உறைவிடமும் அடங்க வேண்டும்.

வெண்சோறு என்பது நெல்லைப் போரடிக் களத்திலிருந்து காலத்தோடு கொள்முதல் செய்வதில் இருக்கிறது. போரடிக் களத்திலிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் நாட்களுக்குக் காலம் நிர்ணயிக்கும் படியான வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும்.

இயற்கை விவசாயத்திற்கு உழவர்களைத் திருப்பும்படியான வாக்குறுதிகள் அதிகம் இடம்பெற வேண்டும். தற்போது மைய வயதினர்கூட சர்க்கரை நோயினால் பீடிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகிவருகிறார்கள். அந்நோயைக் கட்டுப்படுத்தும் தினை வகைகளும் கவுணி அரிசி போன்ற அரிய திவசங்கள் நியாய விலைக் கடைகளில் கிடைக்க வேண்டும்.

கலோரி என்கிற சொல் தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவேண்டிய காலத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ஒவ்வொரு இருபது ஆண்டுகளுக்கும் மக்களிடம் உணவுப் பழக்கத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தேசிய மாதிரி உணவு நுகர்வோர் கணக்கெடுப்பின்படி 1993 ஆம் ஆண்டுகள் வரை உணவுப் பொருளாக அரிசியும் அரிசி வாங்குவதற்கான செலவீனமும் முதன்மையானதாக இருந்தது. ஆனால் 1993 – 2023  இருபது ஆண்டுகளில் அரிசி வாங்குவதை விடவும் மாற்று உணவுகளான மீன், கறி, முட்டை, பால்  அத்தியாவசிய உணவுகளாகி மாதாந்திர செலவீனத்தில் பெரும்பகுதியைப் பிடித்துக்கொள்கின்றன. மாவுச்சத்தை விடவும் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உணவுகளின்மீது மக்களின் நாட்டம் திரும்பியுள்ளது.

தேசிய உணவு நுகர்வோர் அமைப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான சராசரி கலோரி தேவையை வரையறுத்துள்ளது. இதன்படி, கிராமப் புற மக்களுக்குத் தேவையான ஒரு நாளைய சராசரி கலோரி 2400  என்றும் நகர்ப்புற மக்களுக்கு 2100 அளவிலும்  நிர்ணயித்துள்ளது. இந்த கலோரி அளவின் இடைப்பட்ட அளவைத் தாண்டமுடியாத நிலையில் மக்களின் வாழ்வதாரம் இருக்கிறது. இதற்குக் காரணம்  பால், முட்டை, இறைச்சி, மீன் வகைள் அத்தியாவசிய உணவுத் தேவை என்பதை  மக்கள் உணரவோ அல்லது இதை அடிப்படையான உணவுப் பழக்கமாகவோ ஏற்கும் நிலைக்கு  உயரவில்லை. நம் உணவுப் பழக்கம் வாரத்திற்கு ஒரு நாள் இறைச்சி என்கிற அளவிலேயே உள்ளது. எந்தளவு இறைச்சி தேவை, ஒரு வேளை இறைச்சி உணவிலுள்ள மாவுச் சத்து அல்லாத பிற சத்துகள் வேறெந்த உணவுப்பொருட்களில் உள்ளன என்பதை மக்கள் இன்னும் தெரிந்துவைத்திருக்கவிலலை. ஆகவே அரிசி, பருப்பு உணவுப் பொருட்களைத் தாண்டி புரதம், விட்டமின், நார்ச்சத்துகள் சார்ந்த உணவுப்பொருட்கள் அரசின் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனைக்கு வரவேண்டும். அரசியல் கட்சிகள் இவற்றைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கையில் ஆட்சிக்கு வரும் கட்சி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரி உணவை உத்திரவாதப்படுத்தும்.

‘தொல்பசியுழந்த பழங்கண்’ என்கிற பதிற்றுப்பத்தின் வரி நீண்டகாலப் பசியினாலான துன்பத்தைக் குறிக்கிறது. தொல்பசி என்பதைத் தொடக்கக் காலப் பசி என்பதாகவும் பொருள் கொள்ளலாம். மனிதனின் தொடக்கக் காலப் பசியைப் போக்கியது தாய்ப்பால். தாய்ப்பால் விட்டமின்கள், தாதுஉப்புகள், புரதம், மாவுசத்து மற்றும் கொழுப்புஅமிலங்கள் உள்ளடங்கியது. இவற்றை விடவும் முக்கியமான ஒன்று தாய்ப்பாலில் உள்ளது, அது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் ஆன்டிபாடிகள். இந்த எதிர்ப்புச் சக்தி தரும் உணவுப்பொருட்களை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு, மருந்து வேறொன்றில் இல்லை. மாசுக் கலக்காத அமிழ்தம் தாய்ப்பால் என்பது நீண்ட கால நம்பிக்கை. ஆனால் பீகார் மாநிலத்தில் சில குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த யுரேனியத்துடன்கூடிய பாலை குழந்தைகள் பருகுவதன் வாயிலாக எதிர்காலத்தில் இவர்கள் புற்றுநோயால் பீடிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. யுரேனியம் கலந்த குடிநீரைத் தாய்ப்பாலூட்டும் பெண்கள் பருகியதன் மூலமாக குழந்தைகளுக்கு அது கடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் யுரேனியம் உட்பட தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு தனிமமும் கலக்காத சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைக் கொடுக்கும் நிலைக்கு தமிழ்நாட்டுத் தேர்தல் களம் வந்திருக்கிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button