இந்தியா

மத்திய அமைச்சர் பதவி விலகும்வரை பேச்சு கிடையாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை, நாடாளுமன்றப் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார்.

எனது பெயரைக் குறிப்பிட்டு அவர் அழைத்ததால் நான் பதிலளிக்க முயன்றபோது எனது மைக் அணைக்கப்பட்டது; பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

மாணவர்களின் சார்பில் எதிர்க்கட்சிகள் 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கின்றன.

1.ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்.

2.மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை நாங்கள் எவ்வித விவாதத்திலும் ஈடுபடப் போவதில்லை,”
என ராகுல் காந்தி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க அரசு தயார் என்றும், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்தார்.

இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் மீண்டும் கூடியபோது நிலைமை சீராகாததால் ஜகதாம்பிகா பால் தலைமையில் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button