இலங்கை

இலங்கையின் பொறிமுறைகள் ஒருபோதும் எமக்கு நீதியை வழங்கப் போவதில்லை;  யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு

இலங்கையின் பொறிமுறைகள் அனைத்தும் மக்களுக்குப் பிரயோசனமான ஒரு நீதியை வழங்கப் போவதில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொண்டு, சரியான ஒரு சர்வதேசப் பொறிமுறையே இதற்குத் தீர்வு என்பதை வலியுறுத்துவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கே செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வந்திருந்த நிலையில், எங்களது கண்டனங்களைத் தெரிவிப்பதற்காக இங்கே நாங்கள் கூடியிருந்தோம்.

இங்கே நாங்கள் உணர்ச்சி அரசியலை விட்டுவிட்டு, முக்கியமாக நாங்கள் கடத்த வேண்டிய விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

உண்மையிலேயே தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டு வந்திருக்கின்ற இந்த உள்ளகப் பொறிமுறைகள் எந்தவிதத்திலும் மக்களுக்கான நீதியை வந்து இற்றை வரைக்கும் எங்களுக்கு பெற்றுத்தரவில்லை.

அந்த வகையிலே இங்கே செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் சரி, இலங்கை அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகளும் சரி, வெறுமனே மக்களுக்கான தரவுகளைச் சேர்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு கோப்புப் பட்டியலாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனவே ஒழிய, மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கின்ற எந்தவொரு விதமான நடவடிக்கைகளையும் இற்றைக்கு வரை ஏற்படுத்தவில்லை. அது அரசாங்கத்தின் ஒரு இயந்திரமாக தொழிற்படும். நீதித்துறையினால் அதனைப் பெற்றுக் கொடுக்கவும் முடியாது என்பதே எங்களுடைய குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.

இந்த வகையிலே, ஒரு சரியான சர்வதேசப் பொறிமுறையால் மட்டுமே இந்த மக்களுக்கான நீதி, இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வும் நீதியும் கிடைக்கப்பெற முடியும் என்பதே எங்களுடைய இன்றைய போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக அமைந்திருந்தது.

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை 2017 ஆம் ஆண்டு மீண்டும் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த சலுகை வழங்கியதன் முக்கிய கட்டுப்பாடாக, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்தது.

ஆனால், இற்றைக்கு வரை இந்த பயங்கரவாத தடைச் சட்டம் முதற்கொண்ட மக்களை அடக்குகின்ற இந்த அரசின் ஆயுதங்கள் சரியான முறையில் நீக்கப்படவில்லை. ஆகவே இந்த ஓ.எம்.பி.யாக இருக்கட்டும், பி.டி.ஏ.யாக இருக்கட்டும், தொடர்ந்து இந்த வகையில் இருக்கின்ற இந்த காலகட்டத்தில், இங்கே ஐரோப்பிய ஒன்றியத்தினர் வந்துவிட்டு மக்களைச் சந்திக்காமல், சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் செல்வது ஒரு கவலைக்குரிய விடயமாக மாணவர் ஒன்றியத்தாலும், மாணவர் சமூகத்தாலும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையிலே இன்றைக்கு நடந்த இந்த கண்டனப் போராட்டத்தின் வெளிப்பாடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் சந்தித்தவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்த விரும்புவது என்னவெனில், இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்க முடியாது; எந்தவொரு வகையிலும் அவர்களால் இந்த நீதியினைப் பெற்றுக் கொடுக்க முடியாது. எனவே, இதற்கு முறையான ஒரு சர்வதேசப் பொறிமுறை ஒன்று இதற்குத் தொழிற்படுத்தப்பட வேண்டும்.

அரச இயந்திரமாக தொழிற்படுகின்ற இந்த நீதித்துறையினால், அரசாங்கத்தை எதிர்த்து அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பினை இற்றைக்கு வரை வழங்கும் என்கின்ற நம்பிக்கையை – நம்பிக்கை தமிழ் மக்களுக்கும் இல்லை; எந்தவொரு நிலையிலும் அது ஏனைய நாடுகளில் நடந்தபாடாகவும் இல்லை.

ஆகவே, இந்த முறையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்து இணைந்திருக்காவிடினும், அதற்குரிய சரியான பொறிமுறைகளை அவர்கள் கையாண்டு, என்ன என்ன முறையில் இந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமோ அதற்கான சரியான ஒரு பொறிமுறைகளைக் கையாண்டு, இதற்கான தீர்வு வந்து ஒரு சர்வதேசப் பொறிமுறையின் அடிப்படையில் மட்டுமே மக்களுக்கு கிட்டப்படக்கூடும் என்பதே எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஒரு வேண்டுகோளாக அமைகிறது.

ஆகவே, இலங்கையின் பொறிமுறைகள் அனைத்தும் மக்களுக்குப் பிரயோசனமான ஒரு நீதியை வழங்கப் போவதில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொண்டு, சரியான ஒரு சர்வதேசப் பொறிமுறையே இதற்குத் தீர்வு என்பதை வலியுறுத்துகிறோம் – என்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button