இலங்கை

நீதித்துறை தொடர்பான விவாதத்திற்கு அரசு தடை;  எதிர்க்கட்சித் தலைவர்கள் அவசர சந்திப்பு

நீதித்துறை தொடர்பான விவாதத்திற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய அரச ஆளுகையின் மூன்று முக்கிய தூண்களும் , அதிகாரத்தை பகிர்வு , மற்றும் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் ஆகிய ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்திய கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பு உடன்பாடு தெரிவிக்கவில்லை.

இதன்பிரகாம், நீதித்துறை தொடர்பான விடயங்களை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட அவசரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகார பகிர்வு மற்றும் அதிகாரங்கள் இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் கவனம் செலுத்தப்பட்டது.

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளை பாதிக்கும் விடயம் என இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாராளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக்க, ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன, பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பை , சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இலங்கை தமிழரசுக்கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தொழில் கட்சி .பொதுஜன பெரமுன . இ.தொ.க.மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர்களான மனோகணேசன். திகாம்பரம் ஆகியோர் பங்கேற்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button