குட்டிமணி, தங்கத்துரை சிலை அமைக்கத் தடை; 4 ஆம் திகதி இறுதி முடிவு

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை நிறுவுவதை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளை பருத்தித்துறை நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இருவரின் உருவச் சிலைகள் வல்வெட்டித்துறையில் எதிர்வரும் சனிக்கிழமை (25) திறந்து வைப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது.
இந் நிலையில் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப.தவிசாளர் கந்தசாமி சதீஸ், கடந்த திங்கட்கிழமை (20) வல்வெட்டித்துறை பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் அன்றைய தினமே பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.அவர் சார்பில் சட்டத்தரணி சுஜீவன் ஆஜரானார்.
இதனையடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரிரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கை நேற்று புதன்கிழமை(22) வரை ஒத்திவைத்தார்.
நேற்று புதன்கிழமை (22) மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூத்த சட்டத்தரணி என்.சிறிக்காந்தா மற்றும் விசுவலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
குற்றவியல் 106 ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஒன்றை ஏற்படுத்துவதாக பொலிசார் வழக்கு தாக்கல் செய்து குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் செயலாளர்கள் என்றும் புலிகளை மீள் உருவாக்கம் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக சட்டத்தரணிகளால் நீண்ட சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதாவது மேற்படி இருவரும் தடை செய்யப்பட்ட அமைப்பினர் இல்லை எனவும், அவர்கள் பதிவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தினர் எனவும் அக் கட்சியின் பலர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். அவர்கள் புலிகள் அல்ல எனவும், திருகோணமலையில் மூவின மக்கள் வாழும் பகுதியில் அவர்களிற்கு சிலை இருக்கின்ற நிலையில் அங்கு எந்த பொதுத் தொல்லையும் ஏற்படவில்லை என நீண்ட சமர்பணம் செய்தனர்.
பொலிசார் தரப்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் எனவும் புலனாய்வு தகவல்கள் பார்க்க வேண்டும் எனவும் விண்ணப்பணம் செய்தனர்.
வழக்கை விசாரித்த மன்று,சிலையை நிறுவிய பின் இடிப்பது ஏற்புடையதல்ல எனவும் ஆராய்ந்த பின் நிறுவுவது பொருத்தமானது என கருதி இருவரது சிலை நிறுவுவதை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கட்டளை பிறப்பித்த நிலையில் மீண்டும் அன்றைய தினம் பிற்பகல் வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சிலை நிறுவுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
மேலும் இது சிலை நிறுவப்படுபவரின் சகோதரரின் சொந்தக் காணியிலேயே இது இடம்பெற இருக்கிறது. இது பொதுத் தொல்லை அல்ல எனவும், பொதுத் தொல்லை என வல்வெட்டித்துறை மக்கள் யாரும் பொலிசாரிடம் முறையிடவில்லை எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந் நிலையில் சிலை நிறுவுவது தொடர்பில் இறுதி முடிவு எதிர்வரும் 04 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.
![]()