ஐரோப்பிய ஒன்றியத்தினர் வந்த போது சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
இதனால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேசப் பொறிமுறை வேண்டும், ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீக்கு,ஓஎம்பி வேண்டாம், செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும் என தமிழிலும் ஆங்கிலத்திலும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![]()