யாழ்.- தமிழக மீனவர்கள் மோதும் நிலை வருகிறது!; அவர்களை முதல்வர் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்

தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் வரும் தமிழக மீன்பிடியாளர்களின் அத்துமீறல்களை, புதிதாக தமிழகத்தை பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்களின் கோடிக்கணக்கான செத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
குறிப்பாக புங்குடுதீவின் கரையை அண்மித்து வந்து அந்த வெறியாட்டத்தை மீனவர்கள் அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதைவிட கடற்றொழில் அமைச்சரும் மீனவர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன் செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த அல்லது பிடிக்க வேண்டும் என்றே நாம் அனுர அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் இங்கொன்றும் அங்கொன்றும் பேசித்திரிகின்றாரே தவிர உருப்படியான எதையும் இதுவரை செய்யவில்லை.
தேர்தல் காலத்தில் கடற்றொழிலாளர்களிடம் வாக்குறுதிகள் கொடுத்ததை இந்த சந்திரசேகரன் அமைச்சரும் அவர்சார் தரப்பினரும் மறந்து விட்டனரென்றே தோன்றுகின்றது. அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும் இழந்துவருகின்றோம்.
இதன் உச்சமாக இனிவரும் நாள்களில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
![]()