இந்த எலும்புக் கூட்டின் இந்த நிலைக்குக் காரணமென்ன?; தொல்லியல் பேராசிரியரின் அபிப்பிராயத்துக்கு காத்திருப்பு

செம்மணி புதைகுழிக்குள் கால் மடித்து அமர்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூடு தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராயத்தை பெற்ற பின்னரே மேலதிக தகவல்களை கூற முடியும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அகழ்வு பணிகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தனது அபிப்பிராயத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.
அந்த மனித என்புக் கூடு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அது தொடர்பாக கூற முடியும். அகழும் போது வேறு ஏதாவது சான்றுப் பொருட்கள் பிற பொருட்கள் அவதானிக்கப்பட்டால் அந்த மனித என்புக் கூட்டு தொகுதியின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடியதாக இருக்கும்.
இது தொடர்பாக இன்று கலந்தாலோசனை செய்யப்பட்டு இந்தத் துறைசார் விரிவுரையாளருடன் கலந்துரையாட பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் இல்லை – என்றார்.
429 என இலக்கமிடப்பட்ட குறித்த மனித என்பு கூட்டு தொகுதி ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டபோதும் நேற்று வரை அகழ்ந்தெடுக்கப்படவில்லை.
![]()