இலங்கை

மர்ம மரணங்களை ராஜபக்சக்களோடு தொடர்புபடுத்துவதற்கு அரசு முயற்சி; நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

நாட்டில் தற்போது அடிக்கடி நிகழும் உயர் அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சக்களோடு தொடர்புபடுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிகழும் எந்தவொரு பாதகமான சம்பவத்திற்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என கூறும் அரசாங்கம், ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி பேச மறுக்கின்றது.

நாட்டில் நிகழும் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சக்களுடன் இந்த அரசாங்கம் தொடர்புபடுத்துகின்றது.ஆனால், மகிந்த ராஜபக்ச அவருடைய ஆட்சிக்காலத்தில், போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை, நெடுஞ்சாலைகள், மற்றும் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து கவனம் செலுத்தவில்லை. மாறாக, எல்லாத் தீமைகளுக்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என கூறுகின்றது.

மேலும், போரில் வெற்றிபெற தங்களை அர்ப்பணித்த போர் வீரர்களையும், புலனாய்வு அதிகாரிகளையும் சிறையில் அடைத்து, அரசியல் பழிவாங்கலில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான கோப்புக்களை மறைத்த அதிகாரிகள், தற்போது அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்து கொண்டு, உண்மையான குற்றவாளிகளைத் தேடுவதற்குப் பதிலாக அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதேவேளை, தற்போது நாட்டு மக்களின் மீது அதிக வரிச்சுமையை சுமத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளில் இந்த அரசாங்கம் ஈடுபடுகின்றது.

ஒருபுறம், ஜனாதிபதியின் திட்டத்தன் கீழ் 75 சதவீதமானோர் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், மறுபுறம் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் அதிகரித்த வாழ்க்கைச் சுமையால் நெருக்கடியான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button