கதைகள்

அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும்…. சோலையூர் குருபரன்

இப்படியுமா மனிதர்கள்

“சீ.. எல்லாம் வெறுத்துப் போச்சுது. நம்பவே முடியல்ல. இப்படியுமா நடப்பார்கள். யாரைத்தான் நம்புவது. எல்லாம் பொய் புரட்டுமாக இருக்கு. உறவுக்காரர்களும் ஒரே மாதிரித்தானே இருக்கிறாங்க. என்ன உலகமிது. தப்புத் தப்பா நடக்குது” எனச் சலித்தவாறு குடத்தடியில் குந்தியிருந்து சமயல் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் மல்லிகா.

அரச நிதியில் கட்ப்பட்ட முடிவுறாத சிறிய கல்வீடு அவளுடையது. மகள் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தாள். மற்றப் பிள்ளைகள் இரண்டும் பாடசாலைக்குச் சென்றுவிட்டன. கணவன் விமலன் கூலித் தொழிலாழி. வாரத்தில் சில நாட்கள் மாத்திரமே வேலை கிடைக்கும். செலவு போக மிகுதியை மல்லிகாவிடமே கொடுப்பான். சமூர்த்திக் கொடுப்னவு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் தோட்டத்தில் வேலை செய்து அந்த வருவாயையும் கொண்டு சீவியம் நடக்கிறது. சிலர் செய்த வேலைக்குக் கூலியும் ஒழுங்காகக் கொடுக்கமாட்டார்கள்.
ஏழை பாழை என்றால் கஷ்டம், துன்பம், துயரம், விரக்தி எதிர்பார்ப்பு எல்லாமும் கூடவே இருக்கும். அது மல்லிகாவுக்கும் விதிவிலக்கல்ல. இவ்வளவும் கிடைத்ததே சந்தோசம் என்ற உணர்வோடு காலம் போகிறது. அப்படி இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்ற பேராசையும் அவளுக்கில்லை. நிடைப்பதைக் கொண்டு உண்டு, உடுத்தி வாழ்ந்தால் போதும் என்றுதான் வாழ்கிறாள். விமலனிடமும் குடி, புகைத்தல் பழக்கம் எதுவுமில்லை.

கடந்த மூன்று தினங்களாக அரசினால் வழங்கப்படும் நிவாரணத்தைப் பெறுவதற்காக அலைந்த அலைச்சல். அது இல்லை இது இல்லை என்று வாங்கிய திட்டுக்கள், அத, இதக் கொண்டு போக வெண்டும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எதுவும் சொல்லாமை. இதெல்லாம் சொல்லாம விட்டுத்து, “அதெல்லாம் கொண்டுவரணும் எண்டு தெரியாதா” என்று பூரணம் அக்காவின் நக்கலான பேச்சு. வரிசையில் நின்றவர்கள் பலரின் ஏழனப் பார்வை “கெதியாப் போய் எடுத்துத்து வா” என்ற கண்டிப்பான உத்தரவு எல்லாம் சேர்த்துத்தான் மல்லிகாவைச் சலிப்படையச் செய்தது. ‘இதனால மூன்று நாட்களாக பிள்ளைகளுக்கு ஒழுங்கான சாப்பாடு கொடுக்கவில்லையே என்ற கவலை ஒரு புறம், பலரிடம் கேட்டுப் பார்த்தும் பஸ்சில் போவதற்குக் காசில்லாத கவலை மறுபுறம் இத்தனை கவலையினால் நெடிய ஏக்கப் பெரு மூச்சு சுட்டெரிக்கும் வெப்பம் போல் வெளி வந்தது.

குடத்தடியில் பாத்திர பண்டங்களைக் கழுவும்போது முகத்தில் இருந்து வடிந்த வியர்வையை முழங்கையால் துடைத்து விட்டு வீட்டுக்கும் உறங்கும் மகளை எட்டி எட்டிப் பார்க்கிறாள். அவளுடைய சிந்தனை முழுவதும் மூன்று நாளும் நடந்த நிகழ்வுகளையே சுற்றி சுற்றிச் வலம் வந்து கொண்டிருந்தன.

அண்டங்காக்கைக்குத் தினமும் எஞ்சிய உணவுகளைக் கொடுப்பதனால் மல்லிகா மீது தனிப் பிரியம். மல்லிகாவின் துன்பத்திலும் துயரிலும் பங்கெடுத்து கண்ணீர் விடுவதுமுண்டு. தென்னை மட்டை ஒன்றில் அமர்ந்திருந்து மல்லிகாவின் முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்டு தானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தது.
எழுந்து சென்று விழித்தெழும்பிய குழந்கை்குப் பாலைக் கொடுத்துவிட்டுப் பாடசாலை விட்டு வரும் பிள்ளைகளுக்கு சமைக்க ஆயத்தமாகிறாள். அவ்வேளை குடத்தடியில் சிந்திக் கிடந்த உணவினைப் பொறுக்கிக் கொண்டு அண்டங்காக்கை புறப்பட்டது.

பிள்ளைகள் இரண்டுக்கும் உணவைக் கொடுத்துவிட்டு தோட்டத்தில் புல் பிடுங்கிய கூலியை வாங்குவதற்காகச் சென்றுவிட்டாள். மூத்த மகனும் விளையாடச் சென்றுவிட்டான்.

மாலை 4.30 மணி இருக்கும். கோமளம் தன்ட மகனையும் அழைத்துக் கொண்டு பத்திரகாளி போல் வருகிறாள். அவளைக் கண்ட பெண்கள் ஏன் வம்பு வழக்கென்று ஒதுங்கி வழிவிடுகின்றனர். அவளோடு எசகு பிசகென்றால் ஆட்டம் போட்டு மானத்தைப் போக்கி விடுவாள். மடை திறந்த வெள்ளம் போல் அவள் வாயில் இருந்து கெட்ட கெட்ட வார்த்தைகள் கூசாமல் வெளிப்படும். பிறப்பு, வளர்ப்பு, பரம்பரை எல்லாவற்றையும் நாறடித்து விடுவாள். அதனால் ஊரவர்கள் அவளிடம் இருந்து விலகியே இருப்பர்.

“எடியே மல்லிகா! எடியே! எங்கடி ஒண்ட கொட்டன். விளையாடக்குள்ள அவன் என்ட மகனுக்கு அடிச்சுப் போட்டாண்டி. எங்க அவனக் காட்டு” என ஆவேசமாகக் கத்துகிறாள். பிறப்பு, வளர்ப்பு, பரம்பரை எல்லாம் இழுத்து கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறாள். இவளோடு தர்க்கம் புரிந்தால் நிலமை மேலும் மோசமாகிடும் என்று. “அக்கா நீங்க போங்கோ அவன வரட்டும். அவனுக்குச் சூடு வைக்கிறன். இண்டைக்கு இருக்க அவனுக்கு” என்று கோமளத்தின் பார்வையில் படும்படி கம்பித் துண்டொன்றை அடுப்புக்குள் வைக்கிறாள். அதைக் கண்டதும் மனம் மாறிக் கோபம் தணிந்து. “இங்க பாரு உன்ட மகனக் கண்டிச்சு வை. இல்லையெண்டா என்னப்பத்தித் தெரியுந்தானே” என்றவாறு அவிழ்திருந்த கூந்தலை இழுத்து முடிந்துவிட்டு, முந்தானையை இழுத்துச் செருகி, மகனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

பக்கத்து வீட்டுத் தங்கம் மாமி “எங்கடி அவன். இவன் போய் அவனோடு விளையாடிச் சண்ட பிடிச்சழிருக்கானே. இஞ்சபாரு உன்ட குடும்ப மானத்தப் போக்காட்டிப் போட்டாள். உன்ட மகன் நிண்டிருந்தா இண்டைக்கு என்ன நடந்திருக்கும். அவனுக்கு ஏதும் செஞ்சிடாம புத்திமதியச் சொல்லு” எனக் கூறிச் சென்றுவிட்டாள்.

இத்தனை சம்பவத்தையும் மாமரக் கிளையென்றில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அண்டங்காக்கைக்கு அழுகை வந்துவிட்டது. தனக்காக மல்லிகா அக்கா வைத்திருந்த உணவினை எடுத்துக் கொண்டு தன் கூடு நோக்கிப் பறந்த சென்றது. குஞ்சுகளுக்கு உணவைக் கொடுத்ததும் அருகில் இருந்த வேப்பமரக் கிளையில் அமர்ந்து கொண்டு சோகத்தோடு ஊர்க்குருவியின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது.

வானவெளியில் வேகமாகப் பறந்து கொண்டிருந்த ஊர்க்குருவி தாளப் பறந்து வந்து அண்டங்காக்கையின் அருகில் அமர்ந்து கொண்டது.
“அண்ணே பொழுது வேற போகுது. எனக்கும் ஒரு சோலி இருக்கு. அவசரமாகப் பொக வேணும். உங்களக் கண்டதும் வந்திட்டன். உங்கட முகத்தப் பார்த்தா எனக்கும் கவலையாய் இருக்கு. என்னண்ணே நடந்தது”
“அட தம்பி இந்தச் சணங்கள் நடக்கிறதப் பார்த்தாப பயம் பயமா வருதுடா. நமக்கென்ன எதையாவது கொத்தித் திண்டுத்துப் போயிடுவம். ஆனா இந்த அப்பாவிச் சனங்கள ஒருத்தரும் காப்பாத்த மாட்டாங்க போலிருக்கு. எங்க பார்த்தாலும் வஞசகம், சூது, போட்டி, பொறாமை, மற்றவர நோகடித்தல் எல்லாந்தான் நடக்குது. ஒத்தரிட வம்புக்கும் போகாம தானுண்டு தன் குடும்பமுண்டு எண்டு மல்லிகாக்கா வாளுறா. அவவுக்கா இப்புடி எல்லாம் நடக்குது. இண்டைக்குக் கோமளம் எண்டொருத்தி அவட மானத்தப் போக்கட்டிப் போட்டா.

எனக்கெண்டா உடம்பெல்லாம் பத்தித்தான் வந்துது. பறந்து போய் ரெண்டு கொத்துக் கொத்தலாம் போலிருந்தது. பிள்ளைகள் இண்டைக்குச் சண்ட பிடிச்சா நாளைக்கு ஒத்துமையா இருக்குங்கள். இதுக்கெல்லாம் போய் இப்படியா நடக்கிறது. அவள் பொடியனையும் கூட்டித்துப் பேயாடி எலுவா வந்தாள். நீ அதப் பாத்திருக்கணும்” எனப் பெருமூச்சுவிட்டு ஊர்க்குருவியைப் பார்த்தது.
“அண்ணே! கோமளத்தின்ற ஆட்டத்தப் பலமுறை பார்த்திருக்கன். அவளுக்குக் கோபம் வந்தா பத்திரகாளி மாதிரி ஆயிடுவா எண்டு பலரும் கூறக் கேட்டிருக்கன். அண்ணே! நான் பல இடங்களும் போறன். இதப்போல எத்தனையப் பாத்திருப்பன். கொஞசப் பேரத் தவீர எல்லாரும் ஒண்டு மாதிரித்தான் இருக்கிறாங்க. சுனாமி, வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் எது வந்தாலும் திருந்தப் போறதில்ல.

இப்படிப்பட்டவங்களுக்கு உடனுக்குடன் தண்டன கிடைச்சாத்தான் திருந்துவாங்க. சிலதுக்கு வாயில சூடு போடணும். ஒருத்தரிட மனம் வேதனப்படுமே எண்டில்லாம எப்படியெல்லாம் கதைக்குதகள். ஏமாத்துதுகள். உண்மையக் காண்பதே அரிதாரிக்கு. ஆனா ஒண்டு ‘வினை விதை்தவன் வினை அறுப்பான்’ என்பது போல இதுகளுக்கெல்லாம் என்றோ ஒருநாள் தண்டன கிடைக்கும். அதுக்கிடையில் இதுகள் பலரச் நோகடிச்சு விடுங்கள். இதெல்லாம் அழிவுக்கு அறிகுறிதாணண்ணே!” நாம இருப்பமோ தெரியாது. இதெல்லாம் நடக்குமண்ணே!. எனக்கும் நேரமாகுது. அவசரம். பிறகு சந்திக்கிறன்” எனக் கூறிக் கொண்டு அலகினால் இறகினை நீவிவிட்டு சிறகடித்துப் பறந்து சென்றது.

இப்படியெல்லாம் சனங்கள் இருக்குதே… என்று நினைத்தவாறு சற்று ஆறுதலடைந்த அண்டங்காக்கை நீண்ட பெருமூச்சுவிட்டு, தன்னிரு இறகுகளையும் அலகினால் நீவிவிட்டுக் கூடு நொக்கிப் பறந்து சென்றது. ஊர்க்குருவியும் உயரப் பறந்து வான் வெளியில் மறைந்துவிட்டது.
மல்லிகா அடுப்புக்குள் இருந்த சூட்டுக்கோலை எடுத்து மறைத்து வைத்துவிட்டாள். மகன் வரும்போது அம்மா அடுப்புக்குள் சூட்டுக்கோல் வைத்த விபரத்தை வழியில் கேட்டு பயத்தோடு பதங்கிப் பதுங்கி வருகிறான். “மகன் விளையாடிக் கழைத்திருப்பாய் முகத்தக் களுவித்து வா. தேத்தண்ணி போட்டுத் தாறன்” என்றதும் தாயை ஏற இறங்கப் பார்க்கிறான். அவளும் பாசத்தோடு பார்க்கிறாள்….

களம் தொடரும்……

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button