எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரிப்பு

எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர், இவர்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி.தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவர்களில் பெண்களை விட ஆண்களிடையே இத்தொற்று அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதே எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படலாம் எனக் கூறிய வைத்திய நிபுணர், இது தவிர பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் ஊசி ஏற்றும் முறைகளின் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற உபகரணங்களை ஒத்ததாகப் பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவையும் இதற்குப் பங்களிப்பதாகக் கூறினார்.
எச்.ஐ.வி. வைரஸ் தொற்றிய பின்னர் அதனை 100% குணப்படுத்த முடியாது என்றும், ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டால் அவர் நீண்டகால மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், சிறு வயதிலேயே ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டால், அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார்.
எச்.ஐ.வி./STI மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்களைக் கண்டறிவதற்கும் அவற்றின் பரவலைக் குறைப்பதற்கும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், ஒரு சிறப்பு முன்னோடித் திட்டமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை மற்றும் ஆபத்தான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது, பொதுமக்களிடையே சென்று அவர்களின் விருப்பம் மற்றும் தனியுரிமைக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் வகையில் இலவச சேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அங்கு பரிசோதனை அறிக்கைகளின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் அதேவேளை, ஏதேனும் ஒரு நோய் அல்லது தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதற்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
![]()