இலங்கை

புலம்பெயர் தமிழ் மக்கள் வருவதற்கு ஆர்வம் வடக்கில் இராணுவத்தின் இருப்பை குறைக்கவும் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலீடுகளை செய்வர்

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதுடன் , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியுமாக இருக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தை நாங்கள் சுற்றுலா பிரதேசத்தின் முக்கியமான மைய பிரதேசமாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான போக்குவரத்து ஸ்தானங்களை உறுதிப்படுத்த வேண்டும். இதில் முதலாவது பலாலி விமான நிலையம் முக்கியமானது. இந்தியா இதனை அபிவிருத்தி செய்ய தயாராக இருந்தாலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அந்த உதவியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.

மூன்று கட்டமாக அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இணங்கியிருந்தது. அதில் ஓடுபாதை அபிவிருத்தியை செய்ய வேண்டும். பிராந்திய விமானங்கள் வந்து இறங்கக்கூடியவாறு இருக்க வேண்டும். அப்படியென்றால் சிங்கபூர், டுபாய் போன்ற இடங்களில் இருந்து விமானங்களை இறக்கக்கூடியதாக இருக்கும். இந்தியா இலவசமாக அதற்கான உதவியை வழங்க முன்வந்த போதும், அதனை அனுபவிக்காமல் இருப்பது துரதிஸ்டவசமானது. இதன்படி அதனை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் சுற்றுலா பயணிகளாக வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர்கள் வரத் தயாராக இருக்கின்றனர். இதற்காக முதலாவதாக அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும். இராணுவ எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறு கணிசமான மாற்றம் ஏற்பட்டால் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து, முதலீடுகளை செய்து பொருளாதார இருப்புகளை முன்னேற்றலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button