கந்தரோடையில் புதிதாக புத்தர் சிலை வைப்பு; சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள் காணப்படும் பகுதியில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் அனுமதிகள் இன்றி முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளைப் பிரதேச சபை எடுக்குமென வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள் காணப்படும் பகுதியில் கடந்த சனிக்கிழமை (31) தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள் புத்தர் சிலையொன்றைப் புதிதாக வைத்து வழிபாடுகளை மேற்கொண்டதுடன் பிரித் ஓதி மதச் சடங்குகளிலும் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் உடனடியாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி, வேகமாகப் பரவிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் இதுதொடர்பாக வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்படி பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வலிகாமம் தெற்குப் பிரதே சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ் உடனிருந்தார்.
அப் பகுதியில் கடமையிலிருந்த தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தரிடம் சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கேட்டறிந்து கொண்டார். இதன்போது நிரந்தரமாக அங்கு புத்தர் சிலை வைக்கப்படவில்லை எனவும் , வழிபாட்டுக்காகவே புத்தர் சிலை வைக்கப்பட்டது எனவும், வழிபாட்டு நிகழ்வுகள் முடிவடைந்ததும் புத்தர் சிலை வழிபாடுகளை மேற்கொண்ட சிங்கள மக்களால் மீள எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.
இதன்போதே வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் அனுமதி இன்றி மேற்படி பகுதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகப் பிரதேச சபை உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமெனவும், இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க எமது கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உறுதியளித்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
![]()