முகநக நட்பது நட்பன்று!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
என்றார் வடலூர் வள்ளலார்
அத்தகைய உயர் பண்பொடு
வாழ்ந்ததால் பெற்ற பயனோ
இங்கு வாழ்ந்தது போதுமென
வீண்பழி ஏனென்று சென்றீரா
புரட்சியாளனான பாரதியையே
புரியவில்லை உலகு நண்பரே
ஈமச்சடங்கின் போது வந்தோர்
எத்தனை பேர் என்று ஊரறியும்
தாய் மாம்பழம் வேண்டி கேட்டும்
ஆசையாய் வாங்கித்தராத மகன்
இறந்த பின் வருந்தியே அவனும்
தங்க மாம்பழம் தானம் ஈத்தானாம்
உயிருள்ள போது காட்டா அன்பை
உருகி அழுதால் ஊருலகும் ஏற்குமா
நீயுமா புரூட என குளறி சரிந்தவனை
இலக்கிய உலகில் அறியாதாருண்டா
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ
என்றொரு சொல்லும் இங்கு உண்டாம்
என்ன இங்கு இருந்தால்தான் என்ன
கூடுவிட்டு போனால் கூட வருவதில்லை
சிறுவயது தொட்டு நம்மிடை தோன்றி
பழகிய நட்பல்ல நம் நட்பு என்றிடினும்
மீளாத் துயரை என் மனமும் உணருதே
உவப்ப தலைகூடி உள்ளப் பிரிதலானதே
வடக்கிருந்து உயிர் நீத்துக் காட்டினாராம்
பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்காக
அந்த நட்பிற்கு இணையான நட்பென்பேன்
ஆனால் நான் பிசிராந்தையார் இல்லையே!

![]()