முச்சந்தி

பாதாளக் குழுக்களுக்கும், போதைப் பொருள் தரப்புக்குமே கடும் மோதல்;  கைதிகளிடம் துப்பாக்கி சென்றுள்ளது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் தரப்பினருக்கும் இடையில்தான் மோதல் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கிய சந்தேக நபரே முதலில் தாக்கப்பட்டுள்ளார். மோதலின் போது சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராக்கள் முதலில் உடைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பில் ஆராயும் ஸ்கேன் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதொரு செயற்பாடு என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் மேலும் பேசுகையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிகவும் துரதிஸ்டவசமானவை . இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 சிறைக் கைதிகளின் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல் மோதலில் காயமடைந்த 23 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், 54 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சிறைக்குச் சென்ற தனது மகன் சவப்பெட்டியில் வெளியில் வருவார் என்று எந்த தாயும் எதிர்பார்ப்பதில்லை. சிறைச்சாலைக்கு கடமைக்குச் சென்ற தனது கணவர் மற்றும் பிள்ளை சவப்பெட்டியில் வெளியில் வருவார் என்று அவரது உறவுகள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அது நடந்து விட்டது.

ஆகவே தற்போதைய இக்கட்டான தருணத்தில் கைதிகளினதும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உறவுகள் வெளிப்படுத்தும் ஆற்றாமை மற்றும் அவர்களின் துயரத்தை அரசாங்கம் என்ற அடிப்படையில் முழுமையாக உணர்கின்றோம்.அதற்குப் பொறுப்பேற்கிறோம்.இந்த சம்பவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவுமில்லை. அலட்சியப்படுத்தவுமில்லை.

தற்போதைய நிலைமையில் பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்.இந்த சம்பவம் குறித்து பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீதியரசர் (ஓய்வுநிலை) பிரியந்த பிரனாந்து தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். ஏனைய சிறைச்சாலைகளில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது 35 பேர் காயமடைந்த நிலையில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளார்கள். கைதிகளுக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படவில்லை.இந்த

மோதல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமை மீண்டும் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்டது. பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கிய சந்தேக நபரே முதலில் தாக்கப்பட்டுள்ளார்.

மோதலின் போது சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கருவிகள் முதலில் உடைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பில் ஆராயும் ஸ்கேன் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதொரு செயற்பாடாகும். சிறைச்சாலையின் 2 உத்தியோகத்தர்கள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் அவர்களை பாதுகாப்பதற்காக சென்ற நிலையில் தான் ஏனைய உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளார்கள். மோதலில் ஈடுபட்ட கைதிகள் இரும்பு கதவை உடைத்துக் கொண்டு வெளியில் வந்துள்ளார்கள்.

கைதிகளின் கைகளுக்கு துப்பாக்கிச் சென்றுள்ளது. அது குறித்தும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமது சுய பாதுகாப்பு மற்றும் பொதுபாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்கள். இவ்வாறான பின்னணியில் தற்போது 734 கைதிகள் பிறிதொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.அரசாங்கம் வானை பார்த்துக் கொண்டிருந்தது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளிலும் 10 ஆயிரம் கைதிகள் இருப்பதற்கான வசதி காணப்படுகின்ற நிலையில் தற்போது 27 ஆயிரம் பேர் வரையில் உள்ளார்கள்.கடந்த கால அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் சிறைச்சாலை நெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் சந்தேக நபர்கள் மாதக் கணக்கில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் 118 வெற்றிடங்கள் காணப்பட்டன. தற்போது 78 பேருக்கு நியமனங்களை வழங்கியுள்ளோம். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இரசாயன திணைக்களததின் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையை 1 வருட காலத்துக்குள்ளேனும் பெற முடியாது.

சிறைச்சாலைகளிலும் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. சிறைச்சாலை சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு இளைஞர்கள் மத்தியில் பெரிதளவில் ஈடுபாடு காணப்படுவதில்லை. தற்போது சேவையில் உள்ள அதிகாரிகளின் சேவை காலத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button