பலதும் பத்தும்

விழிப்புணர்வு செயலியை உருவாக்கி அசத்திய 8 வயது தமிழ் சிறுவன்!

வனவிலங்குகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய செயலியை கனடாவைச் சேர்ந்த 8 வயதான சிறுவன் உருவாக்கியுள்ளார்.

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அண்மைக்காலமாக கரடிகள் மற்றும் கொயோட்டி எனப்படும் காட்டு ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மார்க்கம் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் வியூகன் சாயூரன் ஒரு புதிய செயலியை உருவாக்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளான்.

ஒண்டாரியோவின் ஸ்டூஃப்வில் (Stouffville) பகுதியில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கேத்லீன் மில்லர் (Kathleen Miller) என்பவரது வீட்டின் பின்புறமிருந்த மேப்பிள் மரத்தில் மாபெரும் கருப்புக் கரடி ஒன்று தங்கியிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பரபரப்பான கோல்ஃப் மைதானம், பள்ளி மற்றும் சந்திப்புகளுக்கு அருகில் உள்ள மரத்தில் அந்த கரடி மூன்று நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் வனத்துறை அதிகாரிகள் அதற்கு மயக்க ஊசி செலுத்தி, பாதுகாப்பாக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர்.

இதேபோல் டொராண்டோவின் வடக்கு குடியிருப்புப் பகுதிகளான அரோரா (Aurora) மற்றும் ஸ்டூஃப்வில்லின் பள்ளிக்கு அருகிலும் கரடிகள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. கரடி நிபுணர் மைக் மெக்கின்டோஷ் (Mike McIntosh) கூறுகையில், “இந்தக் காலப்பகுதியில் கரடிகளுக்குப் போதிய உணவு கிடைக்காததால் அவை உணவைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.

எனவே, மக்கள் தங்களது வீட்டு குப்பைகள் மற்றும் பறவைகளுக்கு வைக்கும் தானியங்களை வெளியில் வைக்க வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார். மற்றொரு சம்பவமாக, விட்பி (Whitby) பகுதியில் உள்ள வேனியர் பூங்காவின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஒருவனை கொயோட்டி ஓநாய் ஒன்று திடீரென முகத்தில் கடித்துக் குதறியுள்ளது. அச்சிறுவன் உயிராபத்தின்றி மீட்கப்பட்டாலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

விழிப்புணர்வு செயலியை உருவாக்கி அசத்திய 8 வயது தமிழ் சிறுவன்! | A Bear In The Backyard Coyote

மார்க்கம் நகரில் மூன்றாம் வகுப்பு படித்து முடித்துள்ள 8 வயதான வியூகன் சாயூரன், இந்த வனவிலங்கு ஊடுருவல் செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வந்தான். “மனிதர்கள் காடுகளை அழித்து வீடுகளைக் கட்டுவதாலேயே விலங்குகள் குடியிருப்புக்கு வருகின்றன.

ஆனால் அவற்றை எதிர்கொள்ள மக்களுக்குத் தெரிவதில்லை” என்பதைப் புரிந்துகொண்ட வியூகன், இதற்கு ஒரு தீர்வாக ‘அர்பன் வைல்ட் வாட்ச்’ (Urban Wild Watch) என்ற செயலியை உருவாக்கினான்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமான ‘ஆந்த்ரோபிக் க்ளாட்’ (Anthropic’s Claude AI) மற்றும் சுவீடனின் ‘லவபிள்’ (Lovable) தளத்தைப் பயன்படுத்தி, வெறும் சில நாட்களிலேயே இந்தச் செயலியை சிறுவன் வடிவமைத்துள்ளார்.

“சுயமாக குறியீடுகளை (Coding) எழுதினால் வாரக்கணக்கில் ஆகும் என்பதால், விரைவாகப் பிரசினையைத் தீர்க்க நான் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன்” என்று வியூகன் கூறுகிறான்.

‘அர்பன் வைல்ட் வாட்ச்’ செயலியின் சிறப்புகள்: • விலங்குகள் இருப்பிட வரைபடம்: பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் ஓநாய், கரடி, நரி போன்ற வனவிலங்குகளைக் கண்டால், உடனடியாக இந்தச் செயலியில் உள்ள வரைபடத்தில் (Map) பதிவிடலாம். • பாதிப்புக்குள்ளான விலங்குகள்: கைவிடப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளைப் பார்த்தாலும் இதில் பிரத்தியேக பொத்தான் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

பாதுகாப்பு அம்சம்: விலங்கு இருக்கும் துல்லியமான இடம் உடனடியாகக் காட்டப்படாது, ஒரு மணிநேரம் கழித்தே காட்டப்படும். சமூக ஊடகங்களில் புகைப்படம் எடுப்பதற்காக மக்கள் அந்த இடத்திற்கு உடனே விரைந்தால் மக்களுக்கோ அல்லது அந்த விலங்குக்கோ ஆபத்து ஏற்படலாம் என்பதால் வியூகன் இந்தச் சாதுரியமான பாதுகாப்பு அம்சத்தை வடிவமைத்துள்ளான். உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் urbanwildwatch.lovable.app என்ற இணைய முகவரி மூலம் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும் என வியூகன் தெரிவித்துள்ளான்.

இந்தச் சிறிய வயதில் சமூகப் பொறுப்புடன் உலகப் பிரசினைக்குத் தீர்வு கண்டுள்ள தமிழ் சிறுவன் வியூகனின் இந்த முயற்சிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button