வடபகுதிக் கடலை பாதுகாக்க வேண்டும்; மீனவ அமைப்பு கோரிக்கை

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமராட்சி மீனவ அமைப்பின் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை புலோலி மந்திகையில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;
அண்மையில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.அதில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரும் கலந்து கொண்டிருந்தார் அதன் பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது சரியான பதிலை வழங்காது, நழுவல் போக்கிலேயே பதிலளித்திருந்தார்.
அதாவது உள்ளூர் இழுவை மடி தொழிலை எப்போது தடை செய்வீர்கள் என்று. அதற்கு அமைச்சர் அளித்த பதில் உள்ளூர் இழுவைமடி தொழில் மென்மையான தொழில். அதனை தடை செய்ய வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்ற கருத்து படவே அவர் தெரிவித்திருந்தார்.
2017 ஆம் ஆண்டு சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட உள்ளூர் இழுவைமடி தடை தொடர்பான சட்டம் வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வரை நடை முறைப்படுத்தப்படவில்லை.
உள்ளூர் இழுவை மடி தொழிலால் நிலமட்டத்திலிருந்து கீழாக ஒரு அடி ஆழத்தில் தோண்டப்படுகிறது. இதனால் மீன் வசிப்பிடங்கள் உற்பத்தியிடங்கள் என்பன முற்று முழுதாக இல்லாமல் போகின்றன. இதனால் தற்போது மீன்பிடி என்று மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் உட்பட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும், உள்ளூர் ரோலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடற்றொழில் தொடர்பாக வாய் திறப்பதி ல்லை. திட்டமிட்ட முறையிலே எமது கடல் வளங்கள் முற்று முழுதாக அழிக்கப்படுகின்றது. இதனை தடுப்பதற்காக சுமந்திரன் உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமான தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டமையினால் தான் கடலில் மீன் பிடி முற்று முழுதாக இல்லாமல் போய் உள்ளது.வடமராட்சி கிழக்கில் அதிகளவான சுருக்கு வலை தொழில்கள் இடம்பெற்று வருகிறது.ஒரு சிலரைத் தவிர வேறு எவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில்லை. வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் முழுமையாக சட்டவிரோத தொழில்கள் இடம் பெற்று வருகிறது. அதனை தடுக்க வேண்டியவர்கள் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்டத்தை,பின்னர் நடைமுறைப்படுத்தாமல் தடுப்பதற்கும் அவரே காரணமாக இருந்தார்.சட்டவிரோத தொழில்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்கு போடுவோம் என்று தெரிவித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அது தொடர்பில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
எமது கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.சட்டவிரோத தொழிலில் ஈடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
![]()