இலங்கை

வவுனியாவில் ஒருவரால் 80 ஏக்கர் காடழிப்பு; வனவளத் திணைக்கள அதிகாரிகளும் உடந்தை

வவுனியா ஓமந்தை – பாலமோட்டை வீதியில் அமைந்துள்ள மாதர்பணிக்க மகிழங்குளம் பகுதியில் இதுவரையில் 80 ஏக்கருகும் அதிகமான பரப்பளவைக் கொண்ட அடர்ந்த காடு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. அரச காணிகளைக் கூறு போட்டு விற்கும் நோக்கில் இடம் பெறும் இந்த வனக் கொள்ளைக்கு வனவளத் திணைக்கள அதிகாரிகளும் துணை போகின்றனர். இது வெறுமனே மரங்களின் அழிவுகள் மட்டுமல்ல வவுனியாவின் குடிநீர் ஆதாரம் மற்றும் யானைகளின் வாழ்விடத்தைச் சிதைக்கும் கொடூரமும் ஆகும். இதன் பாரதூரமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மாதர்பணிக்க மகிழங்குளம் போன்ற காட்டுப் பகுதிகள்தான் இயற்கை நீரேந்துப் பகுதிகளாகச் செயற்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தைப் பேணுகின்றன. தற்போது இப் பகுதியில் 80 ஏக்கர்களுக்கும் மேலாகக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதால் ஓமந்தை, பாலமோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் காலங்களில் மிக மோசமான குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வன்னி மாவட்டத்தின் உலர்வலயக் காடுகள் அரிய வகை மரங்களினதும் வனவிலங்குகளினதும் இயற்கை வாழ்விடமாக உள்ளன. வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதால் அண்மைக்காலமாக வவுனியா – ஹொரவப் பொத்தானை வீதி மற்றும் ஓமந்தைப் பகுதிகளில் மனித – யானை மோதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. காடுகளை இழந்து உணவுக்கும் நீருக்கும் தவிக்கும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களின் பயிர்களைச் சேதப்படுத்துவதோடு உயிர்களையும் பலியெடுத்து வருகின்றன. இப்போது இந்த 80 ஏக்கர்களையும் தாண்டி நிகழும் காடழிப்பு அந்தப் பகுதி மக்களின் உயிருக்கும், பயிர்ச் செய்கைக்கும் மென்மேலும் ஆபத்தை விளைவிப்பதாகவே அமைந்துள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில் சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காடழிப்பு மற்றம் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை இந்த அரசு கொண்டுவந்துள்ள சூழலில் அதற்குச் சவால் விடுவது போல் வவுனியாவில் காடழிப்புத் தடையின்றி அரங்கேறி வருகிறது. சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய காடழிப்பை மேற்கொண்டு வருபவர் மீதும் அதற்குத் துணையாக உள்ள வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீதும் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button