இலங்கை

இனியபாரதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்க மறியல்;  பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

இந்த சம்பவம் தொடர்பில் இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த 2025 ஜூலை 6ஆம் திகதி திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை சிஐடி யினர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் 2005 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவிலை மையமாக வைத்து திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஒரு வருட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வைத்திருந்த இவரை சிஐடியினர் இவருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முன் நகர்வு பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது இவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளதாக சிஐடியினார் நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து நீதவான் இவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button