பலதும் பத்தும்

ஒற்றுமைக்கான அழைப்புடன் 159 வது கனடா தினத்தை கொண்டாடும் கனடியர்கள்

கனடாவின் 159வது கூட்டமைப்பு ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று கனடியர்கள் உற்சாகமாக கனடா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

உலக அரசியல் மாற்றங்கள் மற்றும் சில மாகாணங்களில் எழுந்துள்ள பிரிவினை கோரிக்கைகள் போன்ற சவால்கள் நிலவும் சூழலில், தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவம் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடா உலகின் சிறந்த நாடு. சவால்களும் சிக்கல்களும் இருந்தாலும், சுதந்திரம், பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடாக இது திகழ்கிறது என அமைச்சர் மார்க் மில்லர், தெரிவித்துள்ளார்.

தலைநகர் ஒட்டாவாவில் நடைபெறும் மாபெரும் விழாவில் அமைச்சர் மில்லர் உரையாற்றவுள்ளார். அங்கு கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 159வது கனடா தினத்தை சிறப்பிக்கின்றனர்.

பிரதமர் மார்க் கார்னி காலை ஒட்டாவாவில் உள்ளூர் சமூக விழாவில் பங்கேற்ற பின்னர், நண்பகல் நடைபெறும் தேசிய கனடா தின நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

பின்னர் அவர் ஆல்பர்டா மாகாணத்தின் எட்மன்டனில் நடைபெறும் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இந்த ஆண்டு தேசிய விழா, நாடாளுமன்றக் கட்டடத்தின் மையப் பகுதி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வழக்கம்போல பாராளுமன்ற மலைப்பகுதியில் அல்லாமல், லெபிரெட்டன் ஃப்ளாட்ஸ் பூங்காவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், கியூபெக் மற்றும் ஆல்பர்டா மாகாணங்களில் பிரிவினை ஆதரவு கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன. குறிப்பாக, ஆல்பர்டாவில் இந்த ஆண்டு இறுதியில் கனடாவில் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிவினை தொடர்பான கட்டாய மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஒற்றுமையாக இருக்கும்போதுதான் நாம் மிகவும் வலிமையானவர்கள்” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கனடா உருவாக்கப்பட்டது என கனடா தினத்தை முன்னிட்டு வெளியிட்ட காணொளி செய்தியில் பிரதமர் மார்க் கார்னி, குறிப்பிட்டார்.

தேசிய இரயில் பாதை மற்றும் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை போன்ற நாட்டை ஒன்றிணைத்த வரலாற்றுத் திட்டங்களை நினைவுகூர்ந்த அவர், தற்போது கனடிய தொழிலாளர்கள், கனடிய பொருட்கள் மற்றும் கனடிய மதிப்புகளுடன் நாட்டை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் பொருட்களை வாங்குவது, நாட்டுக்குள் சுற்றுலா செய்வது போன்ற சிறிய ஒற்றுமைச் செயல்களும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.

நம்மை பிரிக்க முயற்சிக்கும் சக்திகள் எப்போதும் இருக்கும். ஆனால், நமது வேறுபாடுகளே நமது பலம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதல்ல, எனவும் கார்னி வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button