தலையாட்டி மூலம் இராணுவம் பிடித்த அண்ணா உட்பட 23 பேர் குறித்து எந்தவித தகவலும் தெரியாது; 96 ஆம் ஆண்டு முதல் சகோதரனைத்தேடிப் போராடும் சகோதரி

1996ஆம் ஆண்டு தலையாட்டியை வைத்து எனது அண்ணாவுடன் சேர்த்து நிறையப்பேரை இராணுவம் பிடித்துச் சென்றது .அதில் எனது அண்ணா உட்பட 23 பேர் தொடர்பில் இன்றுவரை எந்தவித தகவலும் தெரியாது என நாவற்குழியைச் சேர்ந்த காணாமல்போன இளைஞர் ஒருவரின் சகோதரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி உரிமைப் பந்தம் நிகழ்வு நடைபெற்ற போதே குறித்த காணாமல் போன இளைஞனின் சகோதரி இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனது அண்ணாவை 1996ஆம் ஆண்டு ஆடி மாதம் 19ஆம் திகதி தலையாட்டியை வைத்து இராணுவத்தினர் கைது செய்தனர் . எனது அண்ணாவோடு சேர்த்து நிறையப் பேரை கைது செய்தார்கள் . அண்ணாவுக்கு அப்போது 23 வயது. எனக்கு 14 வயது. அம்மாவுக்கு பாரிசவாதம், அம்மாவுக்கு இயலாது. அப்பா வவுனியாவில் வேலை செய்து கொண்டிருந்தவர். நானும் அக்காவும் பள்ளிக்கூடம் போய் விட்டோம் . அம்மாவோடு அண்ணா வீட்டில் இருந்தவர் அண்ணா, உயர்தரம் எடுத்துவிட்டு இருந்தவர். இராணுவத்தினர் சுற்றிவளைப்பு செய்து அண்ணாவை கைது செய்தனர்.அம்மாஅவரை விடுவிக்குமாறு மன்றாடியபோதும் கொண்டுபோய் விட்டனர்.
அம்மா ‘எனக்கு இயலாது, அவன்தான் உதவி’ என்று சொல்லி மன்றாடினார் ஆனால் கூட்டிக்கொண்டு போய்விட்டு விட்டு விடுவோம் என்று சொல்லித் தான் கூட்டிக்கொண்டு போனவர்கள்
அண்ணாவோடு நிறைய பேர் தலையாட்டியை வைத்து அன்று கைது செய்து கொண்டு போனார்கள் .
அன்றையில இருந்து நாங்கள் ஒவ்வொரு நாளும் அண்ணாவைத் தேடி வருகின்றோம்.அம்மாவை நான் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு நாளும் 512 பிரிகேட் முகாமுக்கு போவேன் . மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்துக்கு போனோம் , ஐ.சி.ஆர்.சிக்கு போனோம் ஒவ்வொரு நாளும் அலைந்து திரிந்தும் அண்ணா கிடைக்க வில்லை. இன்று வரைக்கும் நாங்கள் நீதி கேட்டு அலைந்து கொண்டு திரிகின்றோம் , ஒரு இடமும் எந்தவித பதிலும் இல்லை, நீதியும் கிடைக்க வில்லை.
போகாத இடமும் இல்லை, அறிவிக்காத இடங்களும் இல்லை. நாங்கள் முறைப்பாடு செய்யாத இடங்களும் இல்லை. அண்ணாவோடு சேர்த்து நிறையபேரைக்கைது செய்திருந்தார்கள் .அதில் 23 பேர் தொடர்பில் எந்தவித பதிலும் இல்லை.சிலரை உடனே விட்டார்கள், கொஞ்சப் பேரை முகாமில் வைத்திருந்து விட்டு விட்டார்கள். அதில் நிறைய பேர் எங்கள் ஊர் ஆட்கள் தான், நாவற்குழியைச் சேர்ந்தவர்கள்.
இவ்வளவு கஷ்டங்கள், துன்பங்களை நாங்கள் அனுபவித்து வருகின்றோம்.அதை என்றுமே நாங்கள் மறக்க முடியாது . அண்ணாவுக்கு நீதி வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இன்று வரைக்கும் ஏதாவது ஒரு நல்ல பதில் கிடைக்கும், நீதி கிடைக்கும், ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் போராடுகின்றோம் என்றார்.
![]()