இலங்கை

வவுனியா மேயர் பதவி நீக்கப்பட்டதைக் கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்;  ஜே.வி.பி.யின் முகவராகச் செயற்படுவதாகவும் கோஷம்

வவுனியா மாநகரசபை முதல்வர் உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, நேற்று (29) வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னாள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள், பேரணியாக மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்று, காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோஷங்களை எழுப்பினர்.

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜே.வி.பி.யின் முகவராக ஆளுநரே செயற்படாதே, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை வெளிபடுத்து” என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சிவநேசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button