கவிதைகள்

அழியாத நினைவுகளின் மிச்சம்… நெடுங்கவிதை…. முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

கிராமத்தை விட்டு வந்து
பதினைந்து வருடங்கள் ஆகின்றன.
விட்டு வந்தது ஊரை மட்டுமல்ல.
பாதங்களில் ஒட்டியிருந்த ஈரமண்ணின்
கடைசித் துகளையும் தான்.

இங்கே இந்த நகரத்தில்,
கண்ணாடி கூண்டுகளுக்குள் வாழ்கிறேன்.
கால்களுக்கு விலையுயர்ந்த காலணிகள் உண்டு.
ஆனால் நடப்பதற்கு மண் இல்லை.
ஓடுவதற்கு வரப்பு இல்லை.
செயற்கைக் குளிர் உடலைத் தழுவுகிறது.
ஆனால் ஆன்மா மட்டும் இன்னும்
அந்த வைகைக் கரைக் காற்றுக்கு ஏங்குகிறது.

அன்று…
அவள் பெயர் நீலவேணி.
ஊர் வயல்வெளிக் கிணற்றில்
நீராடிவிட்டு வருவாள்.
ஈரம் சொட்டும் கூந்தல்,
கருநாகம் போல அவள் முதுகில் ஊர்ந்து கிடக்கும்.
மஞ்சள் பூசிய அவள் தேகத்தில் இருந்து
நெல்மணிகள் அவித்த வாசம் வீசும்.
சேலைக்குள் ஒளிந்திருக்கும்
அவள் இடையின் மடிப்பு,
பச்சை வயலின் நெளிவைப் போலிருக்கும்.

ஒருமுறை அவள் நெற்றியில்
வியர்வைத் துளி அரும்பியிருந்தது.
அதைப் பார்த்து இளமை வறண்ட பாலைவனமானது.
பனைமர நிழலில்,
காற்று கூட நுழைய அஞ்சும்
ஒரு சந்தில் சந்திப்போம்.
அங்கே மூச்சுக்காற்று மட்டுமே பேசிக்கொள்ளும்.
அவள் இதழ்கள் இளநுங்கின் சுளைகள்.
தீண்டினால் தித்திக்கும் தேன் சுரக்கும்.
அன்று காமம் என்பது பனங்கள்ளைப் போலிருந்தது.
பருகினால் மயக்கம் தரும்.
பருகாவிட்டால் தவிப்பு தரும்.
அது கலப்படமில்லாத உண்மை.

இன்று…
இந்த நகரத்தின் நியான் வெளிச்சத்தில்
அவளைப் போன்ற ஒருத்தியைக் காண்கிறேன்.
விரல் நுனியில் விரியும் செயலியில் அறிமுகமானவள்.
செவ்வண்ணம் தீட்டிய உதடுகள். ஆனால் அதில் சுவை இல்லை.
நறுமணம் பூசப்பட்ட உடல்.
ஆனால் அதில் மண்வாசனை இல்லை.

இருபத்து மூன்றாம் தளத்தின்
குளிரூட்டப்பட்ட அறை.
சாளரத்தைத் திறந்தால்
முத்தமிடுவது தென்றல் அல்ல, கரும்புகை.
அவள் சட்டையைக் களைகிறாள்.
நானோ கடந்தகாலத்தைக்
களைய முடியாமல் தவிக்கிறேன்.
இங்கே யாக்கைகள் பிணைகின்றன.
ஆன்மாக்கள் விலகி நிற்கின்றன.
அலைபேசி போலத் தொடர்பு இருக்கிறது.
ஆனால் அலைவரிசை இல்லை.

இந்த நகரம் காதலை விழுங்கிவிட்டது.
எச்சிலாக உமிழ்ந்தது காமத்தை மட்டுமே.
இந்த யுகத்தில்,
நினைவுகள் மட்டும் இன்னும்
கட்டை வண்டியில் ஊர்ந்து செல்கின்றன.
ஒரு காலத்தில்
இடையில் குடம் சுமந்தவளின் கைகளில்,
இன்று தொடுதிரை அலைபேசி.
விரல்கள் தேடுவது
அந்த ஈரமண்ணின் குளிர்ச்சியை.
கிடைப்பதோ திரையின் வெம்மை மட்டுமே.

இரவு வந்து போர்வையாகப் போர்த்தும் வேளையில்,
பழைய தென்றல் வந்து தழுவும்.
இமைகளை மூடினால்,
அவள் மட்டுமே தெரிகிறாள்.
அரைகுறையாக நனைந்த சேலையுடன்,
சிலம்பொலி இன்றி,
நினைவின் மிச்சத்தில் மட்டும் முழுமையாக.

நவீனம் முழுவதுமாக விழுங்கிவிட்டது.
எலும்புத் துண்டாக எஞ்சியது
இந்த நினைவு மட்டுமே.

அழியாத நினைவுகளின் மிச்சம் என்பது
அவள் தீண்டாத என் தேகமும்,
நான் மறவாத அவள் வாசமும் தான்.

2. சொல்லப்படாத மொழி
அகராதி நிராகரித்த
அந்த மொழிக்கு
எழுத்தில்லை, உச்சரிப்பில்லை.
ஆனால் உடல் முழுக்க வேர் விடும்
மொழி அது.

உன் விரல் நுனி
முதுகில் கோலம் போடும் போது,
தண்டுவடம் எழுதிக் கொள்ளும்
யாரும் படிக்காத காவியம் ஒன்றை.

நீ மூச்சு விடும் சத்தம்
கழுத்துக் குழியில் வந்து விழும் போது,
ரத்தம் சூடேறி ராகத்தை மீட்டெடுக்கும்.

சொல் தடுமாறும் இடத்தில்
பார்வை தொடங்கும்.
பார்வை தோற்கும் இடத்தில்
தீண்டல் யுத்தம் தொடங்கும்.
உன் இதழ் ஓரம் ஒரு துளி வியர்வை.
துடைக்கவில்லை. தாகம் தீர்க்கும் நதி என்று
தாமதித்தேன்.

உடைகள் பேசும் மொழி
உதிர்ந்த பின் தான்
உண்மையான மொழி
உயிர் பெறும்.
அது புரிந்தவருக்கு
போர்வை தேவையில்லை.
புரியாதவருக்கு
புத்தகம் போதாது.

இரவு முழுக்க பேசினோம்.
ஒரு சொல் கூட உதிரவில்லை.
ஆனால் விடியும் போது
இரண்டு உடலும்
ஒரே கதை சொன்னது.

அந்த மொழிக்கு பெயர்
காதல் இல்லை.
காமம் இல்லை.
அதற்குப் பெயர்
சொல்லப்படாத நெருக்கத்தின்
இறுதி மொழி…..

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button