காருக்கு ஆசைப்பட்டோர் சோறுக்கு அலையும் நிலை

எமது நாடு தேர்தல் காலத்தில் அபிவிருத்தியின் சொர்க்கபுரியாக மாறியபோதிலும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் பொய்யின் சொர்க்கபுரியாக மாறிவிடுகின்றது. தேர்தல் காலத்தில் அரச ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கு விட்ஸ் (Vitz) ரக காரொன்றைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனக் கூறி பெரும்பான்மை பலத்துடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதிலும், இன்று அரச அதிகாரிகளுக்குத் தங்களது சம்பளத்தில் கழிக்கப்படும் அடிப்படையில் 20 கிலோ அரிசியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரச அதிகாரிகளில் பலர் இந்த 12 இலட்சம் விட்ஸ் காரை வாங்குவதற்குக் கனவு கண்ட போதிலும், இன்று அவர்கள் 20 கிலோ அரிசியையே பெற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 102 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திஸ்ஸமஹாராம யோதகண்டிய போதிமஹா விகாரைக்கு 1,280,000 ரூபா பெறுமதியான நீர் சுத்திகரிப்பு தொகுதியொன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் நேற்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தான் மக்களுக்குப் பல்வேறு பொருட்களை அதிகமாக விநியோகிப்பதாகவும், அவை நாட்டிற்குத் தேவையில்லை என்றும், நாட்டிற்குத் தேவை கொள்கைகளே என்றும் தன் மீது சேறு பூசி வருகின்றனர்.
கொள்கைகள் பற்றிப் பேசினாலும் இன்று விவசாயிகள் பெரும் துயர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்க நகைகளை அடகு வைத்து, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாய மக்களுக்குத் தரமான உரமோ அல்லது உறை மானியமோ முறையாகக் கிடைத்தபாடில்லை. உரத்தின் விலை அதிகரிப்பு, உரத்தைக் காலத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. விவசாய இரசாயனங்களின் விலை உயர்வு மற்றும் கட்டுப்பாட்டு விலை இல்லாமை, விவசாய உபகரணங்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் உற்பத்திகளை மேற்கொண்டாலும், நேற்று விவசாயிக்கு நிலையானதொரு விலை கிடைப்பதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் மானியங்கள் வழங்குவது பற்றிப் பேசினாலும், அதன் பின்னர் அது குறித்து எவரும் பேசுவதில்லை. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதை விமர்சிப்பவர்கள், தேர்தல் காலத்தில் மட்டுமே நிவாரணங்கள் குறித்துப் பேசி, மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிகளுக்குச் சென்று, இறுதியில் மக்களை நடுத்தெருவில் கைவிட்டு விட்டனர். வயலில் இறங்கி ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா சலுகை விலை வழங்கப்படும் எனக் கூறினாலும் இன்றுவரை அது கிடைக்கவில்லை. ஒரு கிலோ நெல்லுக்கு 75 முதல் 80 ரூபா வரையான விலையே கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று நெல்லுக்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயி வீதிக்கு இறங்கிப் போராடும் போது, விவசாயிகள் ‘கசிப்புக்காரர்கள்’ (சட்டவிரோத மதுபானம் தயாரிப்பவர்கள்) என முத்திரை குத்துகின்றனர். வாக்குகள் பெறும் வரை விவசாயி கடவுளாகக் கருதப்பட்டாலும், தேர்தலின் பின்னர் விவசாயி கசிப்புக்காரனாக மாற்றப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்துகின்றது. எமது நாட்டின் நாகரிகத்துடன் பிணைக்கப்பட்டுள்ள விவசாய முறையை நாட்டிலிருந்து அகற்றி, விவசாயத்துறையை அழிப்பதற்கே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் கைத்தொழில்கள் வளர்ச்சியடைய வேண்டும், அதேபோன்று சேவைகள், சுற்றுலா மற்றும் விவசாயத்துறைக்கும் தேவையான உந்துசக்தி வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அன்று ரணசிங்க பிரேமதாச அவர்கள் 200 ஆடைத் தொழிற்சாலைகளை நடைமுறைப்படுத்திய போதும் விவசாயப் புரட்சியையும் மேற்கொண்டார். இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. நாட்டிற்கு ஒரு மதிப்பைச் சேர்க்கும் போது, அரசாங்கத்திற்குச் சேறு பூச மட்டுமே தெரியும். தேர்தல் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் என்பதால் அதனை மீற முடியாது. இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது சட்டமூலமொன்றின் ஊடாக நெல்லுக்கு நிலையான விலையை நிர்ணயிப்பதாகக் கூறிய போதிலும், இன்று விவசாயி கசிப்புக்காரனாக்கப்பட்டுள்ளனர். இது நாடு எதிர்கொண்டுள்ள பெரும் பேரழிவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நாட்டிற்குத் தேவைப்படுவது அபிவிருத்தி, சேவை, நிவாரணம் மற்றும் நலன்புரிச் சேவைகளாகும். தங்களது திறமையின்மையை மறைப்பதற்காக எதிர்க்கட்சி செய்யும் சேவைகளுக்கு ஆளும் தரப்பினர் சேறு பூசி வருகின்றனர். சமூக ஊடகங்களில் எம்மீது சேறு பூசுகின்றனர்.
76 வருட கால வரலாற்றில் நாட்டின் சேவைகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலேயே செய்யப்பட்டன. ஆனால், முதன்முறையாக எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையைச் செய்தது ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும். இதுவரை காலமும் இருந்த பாரம்பரியத்தை மாற்றி, புதிய கோணத்தில் சிந்திக்கும் ஒரு சக்தியாக நாட்டிற்குச் சேவையாற்றியுள்ளோம். இந்தச் சேவையை எதிர்காலத்திலும் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளவும். யார் ஆர்வம் காட்டாவிட்டாலும், உன்னதமான புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். ஒரு நடைமுறை ரீதியான உண்மையான பௌத்தராக நான் எப்போதும் விகாரைகளுக்கும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மதிப்பைச் சேர்த்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
![]()