உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் குழுவின் சத்தியப் பிரமாண சிசிரிவி காட்சிகள் இரகசியமாக அழிப்பு?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹஷீம் குழுவினர் வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் எடுத்துக் கொண்ட சத்திய பிரகடனம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை இரகசியமாக அழித்தமை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ( சி.ஐ.டி.) அலட்சியப்போக்கு குறித்து பொலிஸ் மா அதிபரிடம் சமூக ஆர்வலர் ஐஸ்வர்ய குணரத்ன அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிசிரிவி காட்சிகள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாகவும் நாங்கள் இதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தோம்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்த காணொளிகளை 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்றைய தினமே கைப்பற்றினர்.
ஆனால், இவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பியது 2020 ஜனவரி 24 ஆம் திகதியாகும்.ஆனால் 9 மாதங்களாக இதனைத் தம் வசமே வைத்திருந்திருக்கிறார்கள்.
இதை அனுப்பும்போது இதில் உள்ள அனைத்து விபரங்களும் அழிக்கப்பட்டே அனுப்பப்பட்டுள்ளன.தற்போது அது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் கடிதம் மூலம் சி.ஐ.டி.க்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: “பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்ட டி.வி.ஆர் இயந்திரத்தின் Hard diskல் எஞ்சிய தரவுகள் எதுவும் காணவில்லை என்பதுடன், எமது ஆய்வகத்தில் உள்ள மென் பொருள் வசதிகளைக் கொண்டு, அழிக்கப்பட்ட தரவுகளை மீண்டும் மீட்டெடுக்க சாத்தியமில்லை.”அதாவது தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன.
9 மாதங்கள் இதனைத் தம் வசம் வைத்திருந்ததால் தரவுகள் அழிந்துபோயுள்ளன. இதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபருக்கு (அதாவது தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு) கடிதம் ஒன்றும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகத் தெளிவான விடயம் என்னவென்றால், விசாரணைகளுக்குத் தேவையான பல முக்கிய தரவுகள் இந்த சீசீடிவி காணொளிகளில் இருந்துள்ளன.
அதாவது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தத் தரவுகளைப் பார்த்து பகுப்பாய்வு செய்த பின்னரே இந்த காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த டி.வி.ஆர் இயந்திரம் சட்டபூர்வமான முறையில் பொறுப்பேற்கப்படவோ அல்லது ஒரு வழக்குப்பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவோ இல்லை.
அதாவது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதனை முறையாகத் தங்களது புத்தகங்களிலோ அல்லது அது தொடர்பான ஆவணங்களிலோ பதிவு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
![]()