உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாக்குதல்; பிரதான சூத்திரதாரியை நெருங்கி விட்டோம் !; விரைவில் கைதாவார்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை பிடிக்கும் முயற்சி இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது என்றும், இது தொடர்பான விசாரணைகளின் போது பிரதான சூத்திரதாரிகள் போதைப் பொருள் வியாபாரிகளுக்கும் பின்னால் இருந்துள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பிடிப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாக முயற்சிகளை மேற்கொண்டோம். இன்னும் அந்த முயற்சி நடக்கின்றது. இதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். அதேபோன்று போதைப் பொருள் போன்ற ஏனைய குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதலில் நேரடியாக தொடர்புபட்ட வியாபாரிகளை கண்டுபிடித்தோம். இந்நிலையில் அந்த வியாபாரிகளின் பின்னால் இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும் இப்போது கைது செய்ய முடியுமாகியுள்ளது. மக்களை கொல்லவும் பணம் வாங்கியுள்ளனர். மக்களை காப்பாற்றவும் பணம் வாங்கியுள்ளனர். அரசாங்கத்திடம் சம்பளமும் பெற்றுள்ளனர். இவை வெளிவருகின்றன.
நாங்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். இதனால் பழைய அரசியல் அதிகாரங்கள் துண்டுகளாகியுள்ளன. அவர்கள் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை எமது அரசாங்கத்தின் வெற்றியே.
அதேபோன்று போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பலர் தற்போது வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். மக்களுக்கு மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல் உருவாகி வருகின்றது என்றார்.
![]()