இலங்கை

சர்வதேச நீதி விசாரணை வருமாக இருந்தால் சாட்சியங்கள் வழங்க யாழ்.மக்கள் தயார்!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்கள் இருந்ததற்கு கண்ணால் கண்ட சாட்சிகளும், அந்த சித்திரவதைகளில் இருந்து தப்பிய உயிருள்ள சாட்சியங்களும் பலர் இருக்கின்றார்கள். சர்வதேச நீதி விசாரணை வருமாக இருந்தால், அனைத்து சாட்சியங்களையும் வழங்குவதற்கு யாழ் அரியாலை வாழ் மக்கள் தயாராக இருப்பதாக செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார்.

செம்மணி அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்ச கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி உரிமைப் பந்தம் எனும் தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்கள் ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் யாழ் அரியாலை வாழ் மக்கள் சார்பில் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான சில விடயங்களை ஊடகங்களுக்கு முன்னால் வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது. ஏனென்றால், இன்று ஊடகங்கள் அரியாலை செம்மணி சித்துப்பாத்தியில் எடுக்கப்படுகின்ற எலும்புத் தொகுதிகளை மிகவும் சரியாக, நேர்த்தியாக ஆவணப்படுத்துகின்ற செயல்பாட்டை இந்த மூன்றாவது கட்டத்திலும் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக, இதற்கு முன் நடைபெற்ற இரண்டு மனிதப் புதைகுழி அகழ்வானது, கிரு ஷாந்தியுடைய மனிதப் புதைகுழி அகழ்வாக இருக்கட்டும், அல்லது 1999ஆ ம் ஆண்டு ஜூலை மாதம் நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையின் பேரில், சர்வதேசப் பிரதிநிதிகளுடைய மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆவணப்படுத்தல் என்பதும் சரியாக இடம்பெறவில்லை. செய்தித் தணிக்கைகள் இருந்தன. அந்த நிலைமையில், இன்று இந்த நிகழ்வு இதற்கான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றது.

அதில் முதலாவது விடயமாக, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் என்பது 80 வருடங்களுக்கு மேற்பட்ட சைவ மக்களுடைய பாரம்பரியமாக எரியூட்டுகின்ற சுடலையாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் நீதிமன்றத்தினுடைய கட்டளையின் பேரிலும், அல்லது மிகச் சிறியவர்கள் இறக்கின்ற தருணத்தில் மட்டும்தான் எமது யாப்பிலும், பேச்சு வழக்கிலும் கூறிவந்த ஒரே ஒரு விடயம்.இப்போது தகனமேடை இருக்கின்ற பகுதிக்கு வடகிழக்காக இருக்கின்ற ஒரு சிறிய பகுதியில் மட்டும்தான் அவ்வாறான தகனங்கள் இடம்பெறும். வேறு எங்கும் புதைக்கின்ற செயல்பாடு 80 வருடமாக இடம்பெறவில்லை என்பது அரியாலையில் வாழ்கின்ற, பூர்வீகமாக வாழ்கின்ற எம்மூதாதையருக்கும் எமக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் 1995ஆ ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பின்னர், இந்த இடத்தை இராணுவம் கைப்பற்றிய காலப்பகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை எம்முடைய கையில் இந்த சுடலையை ஒப்படைக்கும் வரை, முற்றுமுழுதாக இராணுவத்தினுடைய காவலரண்கள் நிறைந்த, இராணுவ சோதனைச் சாவடி நிறைந்த இராணுவ முகாமாகத்தான் இந்த அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் இருந்து வந்தது.

இந்த நிலைமையில்தான் 1996ம் ஆண்டு காலப்பகுதியிலே கிருஷாந்தியினுடைய படுகொலையைத் தொடர்ந்து, இங்கே 1999ஆம் ஆண்டு ஆறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு 15 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன. அது எடுக்கப்பட்ட பகுதிகள் இந்த சித்துப்பாத்தி இந்து மயான சுடலைப் பகுதி அல்ல. இங்கே உங்களுக்கு முன்னால் இருக்கின்ற இந்த பிள்ளையார் கோயில் ஆலயத்தினுடைய ஒரு பகுதியிலும், அங்கே மருத மரத்தின் பின்னால் இருக்கின்ற ஒரு கேணியிலிருந்து இரண்டு எலும்புக்கூடுகளும், அதனைவிட இந்த உப்பளப் பாத்தியினுடைய பகுதியில் சில எலும்புக்கூடுகளும் மொத்தமாக ஆறு புதைகுழிகளில் இருந்தும் 15 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன.
எனவே, இந்த மனிதப் புதைகுழி என்பது தனியே இந்த சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக எவரும் நினைத்துவிட வேண்டாம். இந்த புதைகுழிகள், என்னைப் பொறுத்தவரையில் 2019 ஆம் ஆண்டு நீர்வழங்கல் சபையினால் நாயன்மார்கட்டுப் பகுதியிலே ஒரு தண்ணீர் தாங்கித் தொட்டி அமைக்கின்ற போது, சில மனித எச்சங்களை அடையாளப்படுத்தி அவற்றினை எடுத்து, நீதிவான் நீதிமன்றத்திற்கு அது வழக்காகக் கொண்டு செல்லப்பட்டது., இன்றுவரை அந்த வழக்கு இல்லை. அந்த இடம் கூட இந்த செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட விடயங்கள்.

மிகவும் தெளிவாகச் சொல்கின்றேன், மரண தண்டனைக்கைதியாகவுள்ள இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல்சோமரத்ன ராஜபக்ச இந்த பகுதியில்தான் தான் கடமையாற்றியதாக தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது உண்மையல்ல.

இராணுவத்தினுடைய 7சி எல்ஏ இராணுவப் படையணி என்பது, 15 உறுப்பினர்களை அரியாலையில் கொண்ட ஒரு இரகசிய இராணுவ அணியாகச் செயல்பட்டது. அவர்கள் கைதடியிலிருந்து, மணியந்தோட்டத்திலிருந்து,

கொழும்புத்துறையிலிருந்து, அரியாலை புங்கங்குளம் பகுதியிலிருந்து, நாயன்மார்கட்டு பகுதி வரை அனைத்து இடங்களுக்கும் சென்று அனைவரையும் கைது செய்து, அவர்களை விசாரிக்கின்ற, சித்திரவதை செய்கின்ற செயல்பாட்டில் ஈடுபட்ட ஒரு இராணுவக் குழு. இது தொடர்பான கண்ணால் கண்ட சாட்சிகளும், அந்த சித்திரவதைகளில் இருந்து தப்பிய உயிருள்ள சாட்சியங்களும் பலர் இருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக அரியாலை, இந்த செம்மணிப் பகுதியிலே ஒரு பாரிய மனிதப் புதைகுழி கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டப்பட்டு, அதற்கு முன்னால் ஒரு இளைஞன் அம்மணமாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில், கடவுளின் சித்தத்தால் தப்பி பூசாவுக்குள் கொண்டு செல்லப்பட்டு, இன்று விடுதலையாகி இந்த அரியாலை பகுதியில் வசித்து வருகின்றார். ஆனால் அவர் இந்த இலங்கை கட்டமைப்பிற்குள் இருக்கின்ற நீதித்துறையை நம்பியோ, அல்லது இந்த விசாரணையை மேற்கொள்ளுகின்ற சி.ஐ.டி.யினரை நம்பியோ தன்னுடைய வாக்குமூலத்தைத் தரத் தயாராக இல்லை.
இங்கே சர்வதேசப் பிரதிநிதிகளுடைய மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டுமென சில தரப்பினர் கூறுகின்றார்கள். மிகவும் தெளிவாக எங்களுடைய கருத்தை நாங்கள் கூற விரும்புகின்றோம். 1999ஆம் ஆண்டு இங்கே நடைபெற்ற அகழ்வு என்பது சர்வதேசப் பிரதிநிதிகளுடைய மேற்பார்வையில்தான் இடம்பெற்றது. ஆனால் இன்று, அந்த 1999ஆம் ஆண்டு வழக்கு இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்தும், அந்த செம்மணி மனிதப் புதைகுழியினுடைய வழக்கு இன்றும் கிடப்பில் போடப்பட்ட வழக்காக இருக்கின்றது.

அதிலும் மிகவும் குறிப்பாக, 15 எலும்புக்கூடுகளில் இரண்டு இளைஞர்கள் அரியாலை பொன்னம்பலம் சந்தியில் இருக்கின்ற, இன்று ராணுவத்தினுடைய மூவ்மெண்ட் டிபார்ட்மென்ட்டினுடைய அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிற இராணுவ அதிகாரியினால் கைது செய்யப்பட்டு காணாமல் போன இரண்டு இளைஞர்கள், அதாவது ராசையா சதீஷ்குமார், மகேந்திரம் பாபுஎன்ற இளைஞர்களுடைய எலும்புக்கூடுகள் , இந்த ரோட்டிற்கு அருகில் இருக்கின்ற பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருந்த சோதனைச் சாவடியில் இருந்துதான் கண்டெடுக்கப்பட்டு அது அடையாளம் காணப்பட்டது.

ஆனால், அந்த இரண்டு வழக்குகள்கூட இன்று கிடப்பில் போடப்பட்ட வழக்காகத்தான் இருக்கின்றது. எனவேதான் நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகிறோம், இங்கே பல சித்திரவதை முகாம்கள் இருந்தன. அதில் மிகப் பிரதான முகமாக புங்கங்குளத்தில் இருந்த இராணுவத்தினுடைய மூன்று படைப்பிரிவுகளைக் கொண்ட இராணுவ முகாம், 7சி Lஏ இராணுவத்தினுடைய இரகசிய முகமாகச் செயல்பட்டு, அங்கு மிக முக்கியமாக தற்போது என்.பி.பி. அலுவலகம் இயங்கிற வீட்டில்தான் சித்திரவதை முகமாக அந்த காலப்பகுதியில் செயல்பட்டிருந்தது.

இதனைவிட நீங்கள் ஏ-9 பாதையால் வருகின்ற போது மாம்பழச் சந்தி, தபால் கட்டடச் சந்தி ஜெயா பில்டிங் சித்திரவதை முகாம், நெடுங்குளம் சந்தி இராணுவ முகாம் சித்திரவதை முகாம், பொன்னம்பலம் சந்தியில் இருந்த இராணுவ முகாம் சித்திரவதை முகாம்,அதற்குப் பின்னால், 26 இடங்களில் இராணுவப் புதைகுழி, மனிதப் புதைகுழி இருந்ததாக சோமரத்ன ராஜபக்ச உட்பட மூன்று அதிகாரிகள் 26 இடங்களை அடையாளப்படுத்தினார்கள். அதில் ஒரு இடம் பொன்னம்பலம் சந்தியில் இருக்கின்ற இடம்.

ஆனால் இதனைவிட, இந்த அரியாலை கொட்டுகிணற்றடி அதுக்கு அருகில், வயலின் நடுவில் இருக்கின்ற நிலப்பகுதி இராணுவத்தினுடைய ‘சி’ சித்திரவதை முகாம். யாழ் குடாநாட்டிலே கைது செய்யப்படுகின்ற அதிகமான இளைஞர், யுவதிகளை இந்த வெட்டவெளியில் கொண்டுவரப்பட்டு, இந்த ‘சி’ சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் அந்த இடத்தில் இன்றும் இருக்கின்றன; சாட்சியங்களும் இருக்கின்றன. இவை எவற்றையும் அந்த மக்கள் இலங்கையினுடைய நீதித்துறைக்கு வழங்கத் தயாராக இல்லை. ஒரு பொதுவான சர்வதேசத்தினுடைய மேற்பார்வை மட்டுமல்ல, விசாரணை நடக்குமாக இருந்தால் அதனை நாங்கள் கையளிக்கத் தயாராக இருக்கின்றோம்.

கடந்த 26ஆம் திகதி நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்—இந்த கிருஷாந்தியினுடைய படுகொலை வழக்கு என்பது இன்று அரியாலையில் நடக்கிற சித்துப்பாத்தி செம்மணி வழக்குடன் தொடர்புபட்டது என தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக உண்மையை அவர் ஒப்புக்கொண்டிருக்கின்றார். அத்துடன், சோமரத்ன ராஜபக்ச பொதுமன்னிப்பு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டால், அவர் குற்றவாளி என்ற அடிப்படையில் தான் அந்தப் பொதுமன்னிப்பைக் கோரியுள்ளார். சோமரத்ன ராஜபக்ச நிரபராதி அல்ல; அதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. மணியந்தோட்டத்தில் மனிதப் புதைகுழி இருக்கின்றது; கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இருந்த ராஇணுவ முகாமில் மனிதப் புதைகுழி இருந்தது. அதனை 1999ம் ஆண்டுக்கு முன்னர் பல இடங்களில் அதனை அகற்றியிருக்கின்றார்கள்.

இன்று அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திலே கண்டறியப்படுகின்ற மனிதப் புதைகுழி என்பது முதல்தர மனிதப் புதைகுழி. உடல்களை முதல் முதல் புதைத்த இடம். ஆனால், ஏற்கனவே இருந்த மனித எச்சங்களை எடுத்து, அதை அகற்றி, அதை இல்லாதொழிக்கின்ற செயல்பாட்டைச் செய்த இரண்டாம் தர மனிதப் புதைகுழியும் இந்த அரியாலை மண்ணில் இருப்பதாகப் பலர் கூறுகின்றார்கள். காலம் நிச்சயமாக அவற்றை அடையாளப்படுத்தும்.எனவே, இவற்றுக்கெல்லாம் ஒரு சர்வதேச நீதி வருமாக இருந்தால், அனைத்து சாட்சியங்களையும், அனைத்து சம்பவங்களையும் கொடுப்பதற்கு இந்த யாழ் -அரியாலை வாழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button