உலகை அதிர விடும் வடகொரிய ஜனாதிபதி ; மிரள வைக்கும் புதிய போா்க்கப்பல்

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் 5,000 டன் எடையுள்ள அதிநவீன ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல் அந்நாட்டு கடற்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டது.
வட கொரியாவின் மேற்கு பகுதியில் உள்ள நம்போ துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய அதிபா் கிம் ஜங் உன், ‘இக்கப்பல் நாட்டின் வளா்ந்து வரும் ராணுவ மற்றும் கடல்சாா் அணு ஆயுத பலத்தின் முக்கிய அடையாளம்.
இதே ரகத்தைச் சோ்ந்த மற்றொரு போா்க் கப்பல் பழுதுபாா்க்கப்பட்டு விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக 10,000 டன் எடையுள்ள போா்க் கப்பலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நமது கடற்படை வெறும் எல்லையைப் பாதுகாக்கும் படையாக மட்டுமே இருந்த காலம் கடந்து, தற்போது அணு ஆயுத பலத்துடன் வியூக முக்கியத்துவம் வாய்ந்த படையாக உருவெடுத்துள்ளது’ என்றாா்.
வட கொரியாவின் மேற்கு கடற்கரைப் பாதுகாப்புக்கான இந்த ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல், கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் எதிரி நாட்டு கப்பல், விமானங்களைச் சுட்டு வீழ்த்தும், அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
![]()