இலங்கை

முற்றாக இராணுவப் பாதுகாப்பிலிருக்கும் குருந்தூர் மலையிலிருந்த சூலத்தை திருடியது யார்?

முற்று முழுதாக இராணுவப் பாதுகாப்பிற்குள் இருந்த குருந்தூர் மலையில், நாங்கள் வழிபட்டு வந்த அந்த சூலத்தை திருடியது யார்? தமிழர் வழிபாட்டு அடையாளங்களை திருடுவது தான் படையினர் பணியா? சிங்கள பௌத்தர் இல்லாத கொக்கிளாயில் அந்தப்பெரிய விகாரையை, அதுவும் தமிழர் காணியில் நீங்கள் நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன?அங்கு புத்தர் பெருமான் வருகை தந்தாரா?என தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள்,இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய

அவர் மேலும் பேசுகையில்,

கொக்குத்தொடுவாயில் தனியார் காணியில் அத்துமீறி உப்பளம் அமைக்க அனுமதிப்பதா மகாவலி அதிகார சபையின் வேலை? அல்லது தமிழர் விளைநிலங்களுக்கு குறுக்காக வேலி போடுவதா அதன் வேலை? நீதிமன்ற உத்தரவுகளை புறந்தள்ளி,வெளிப்படையான ஆய்வுகளைப் புறந்தள்ளி, படையினர், பொலிஸாரின் பாதுகாப்போடு இரகசியமாக தமிழர் தொல்லியல் அடையாளங்களை சிதைப்பதா தொல்லியல் திணைக்களத்தின் வேலை?

முற்றுமுழுதாக இராணுவப் பாதுகாப்பிற்குள் இருந்த குருந்தூர் மலையில், நாங்கள் வழிபட்டு வந்த அந்த சூலத்தை திருடியது யார்? தமிழர் வழிபாட்டு அடையாளங்களை திருடுவது தான் படையினர் பணியா?சிங்கள பௌத்தர் இல்லாத கொக்கிளாயில் அந்தப்பெரிய விகாரையை, அதுவும் தமிழர் காணியில் நீங்கள் நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன? சிங்களவர்களே வாழாத வட்டுவாய்க்காலில் நீங்கள் கட்டிய அந்த விகாரைக்குரிய பின்னணி என்ன?

அங்கு புத்தர் பெருமான் வருகை தந்தாரா? அல்லது சிங்கள பௌத்தர்கள் வசித்தனரா? இவற்றை எல்லாம் நிறுவி இனி எப்படி எல்லாம் வரலாற்றை மாற்றப்போகிறீர்கள்?நாட்டின் அபிவிருத்தியை வரி அறவீடுகளால் மட்டும் கண்டுவிடமுடியாது. ஒட்டுமொத்த தீவையும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதன் ஊடாகவும் கூட ஏற்படுத்தி விடமுடியாது.

இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துங்கள். இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துங்கள். உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எங்களின் நிலங்களை எங்களிடம் தாருங்கள்.

இன்றளவில் எங்கள் உறவுகள் எலும்புக்கூடுகளாகி செம்மணியில் இன்றும் சாட்சிகளாக நீதிக்காக காத்திருக்கிறார்கள். மறுபுறம் எங்களுக்காக உடன் நின்றவர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்றளவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக நாம் தேடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைத் தாருங்கள். இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் மலரப் போவதில்லை என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button