இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வதற்குத் தேவைப்படின், தான் அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ‘ரி.வி தெரணவில்’ ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இதில் அவர் மேலும் கூறுகையில்,

“பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வெறுப்புடனும் கோபத்துடனும் நடுங்கிக்கொண்டு, ‘இந்தச் சட்டங்களை பாராளுமன்றத்தில் கொண்டுவர நாங்கள் அனுமதிக்க மாட்டோம், எங்களுக்குத் தேவை பயங்கரவாதத்திற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வருவதல்ல, இருக்கின்ற சட்டத்தை முழுமையாக ஒழிப்பதுதான்’ என்று கத்தியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. யுத்தம் இல்லாத இந்த நாட்டில் எதற்கு பயங்கரவாத சட்டங்கள் என்று கேட்டவர்கள், இன்று இந்தப் பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சித்திரவதைகளை கொடுத்து வருகிறார்கள், நாட்டைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியை அழைத்துச் சென்று ‘செல்’ ஒன்றில் அடைத்து, நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததை சி.ஐ.டி ஒப்புக்கொண்டது. காட்டுமிராண்டித்தனத்திற்குத்தான் நாங்கள் எதிரானவர்கள். விசாரணைகள் குறித்து எங்களுக்குப் பிரச்சினையில்லை. தற்போதும் இதனை நிறைவேற்றிக்கொள்ளப் பிரச்சினையில்லை. மீண்டும் இதில் எதையும் மாற்ற வேண்டியதில்லை. இந்தச் சட்டத்தை மேலும் வைத்திருப்பதற்குத்தான் (அரசாங்கம்) குழுக்களை நியமிக்கிறார்கள்.” என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button