இலங்கை

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமையவே முற்றிலும் சட்டப்பூர்வமாக இயங்கி வருகிறது.

அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தினாலும், இது எந்தவொரு இராணுவப் பிரிவிற்கோ, பொலிஸாருக்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ சாதகமாகச் செயல்படாத ஒரு சுயாதீனமான ஆணைக்குழு ஆகும். பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தற்போது மக்கள் மத்தியில் ஓ.எம்.பி-யின் செயல்பாடுகள் குறித்து நேர்மறையான (Positive) எண்ணம் உருவாகியுள்ளதால், மாவட்ட ரீதியாக நடத்தப்படும் அமர்வுகளுக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்து வருகின்றனர். தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85-க்கும் அதிகமான குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.

மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி, உண்மையைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் முக்கியப் பங்கு ஊடகவியலாளர்களுக்கு உண்டு” என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button