செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: தவறிழைத்த இராணுவத்தினர் எவராயினும் விசாரிக்கத் தயார்; ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நீதியான விசாரணை என நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி

எமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இராணுவ உயர் அதிகாரி எவரேனும் தவறிழைத்திருந்தால், அதற்கான ஆதாரங்களை யாராவது சமர்ப்பிக்கும் பட்சத்தில், முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே நீதி அமைச்சர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்போது தடையின்றி நடைபெற்று வருகின்றன. எனவே, இது குறித்து யாரும் தவறான செய்திகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இங்கு கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் குறித்து யாருக்காவது ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், அவர்கள் அதனை வெளிப்படுத்த முன்வர வேண்டும்.”
“இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை நான் சிறைச்சாலையில் சந்தித்திருந்தேன். அப்போது, தன்னைச் சிறையிலிருந்து விடுவித்தால் இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளைக் கூறத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவ்வாறு செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை.”
“காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளைக் கைவிட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வேறு வழிமுறைகள் கிடையாது.
கடந்த கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது வெறும் கண்துடைப்பாகவே வைக்கப்பட்டிருந்தது. அதற்கான வசதி வாய்ப்புகளோ, நிதியோ வழங்கப்படவில்லை. ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் அதற்குத் தேவையான சகல நிதிகளையும் ஒதுக்கியுள்ளோம். அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளோம். நாம் எதையும் செய்யவில்லை என யாராவது நிரூபித்தால், அதற்குப் பதிலளிக்க நாம் தயாராக இருக்கின்றோம். எனவே, கடந்த கால அரசாங்கங்களை ஒப்பிட்டு எமது அரசாங்கத்தை மதிப்பிட வேண்டாம்.”
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நீதியை நிலைநாட்டுவேன். எல்லோரையும் சிறையில் அடைப்பதன் மூலம் மட்டும் இதனைச் செய்துவிட முடியாது. எமது அரசாங்கக் காலத்தில் இந்தச் செயல்முறையை எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இன்றி, சுமுகமாகக் கொண்டு செல்வோம். கடந்த காலங்களில் எவரும் இவ்வாறான முயற்சிகளை எடுக்கவில்லை. எமது அரசாங்கம் இதனை நிச்சயம் செய்யும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படும்.
யாராவது ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதற்கு வலுவான சான்றுகள் அவசியமாகும். ஆதாரங்கள் இன்றி வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்க முடியாது. வெளியில் இருந்து கொண்டு எதனையும் பேசலாம். ஆனால், உரிய ஆதாரங்களை முன்வைத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.
![]()