நல்லபடி வாழ்வோம் நல்லதையே நினைப்போம்!… கவிதை… ஜெயராம்சர்மா

அன்பாக இருப்போம் அளவாகப் பேசுவோம்
அழவைத்துப் பார்க்கும் வழிபோகா திருப்போம்
அடுத்தவர் படுந்துயரை போக்கிடவே நினைப்போம்
ஆணவத்தை அழுக்காறை அகமேற்றா திருப்போம்
கனிவாகப் பேசுவோம் கண்ணீரைத் துடைப்போம்
காய்தல் உவத்தலின்றி கையணைத்து நிற்போம்
துணிவாக நடப்போம் துன்பங்கள் துடைப்போம்
வழிமாறிப் போவாரின் மனமாறச் செய்வோம்

அறவழியில் நடப்பாரை அறிமுகம் செய்வோம்
ஆணவம் அழிவுதரும் விட்டுவிடச் சொல்வோம்
அன்புதான் என்றுமே ஆதாரம் என்போம்
அன்புதனை அணைப்போம் ஆண்டவனும் அருள்வான்
உண்ணுகின்ற உணவும் பருகிவிடும் நீரும்
வாழுகின்ற வரைக்கும் யாவருக்குந் தேவை
அதைத் தட்டிப்பறிக்கும் அநியா வழியில்
செல்லுவதைத் தடுப்போம் திருத்துவோம் தினமும்
கிடைக்கின்ற வாழ்வு யாவருக்கும் வரமே
அதையழிக்கும் வழியைத் தடுத்துவிட வேண்டும்
நல்லபடி வாழ்வோம் நல்லதையே நினைப்போம்
கல்லு முள்ளையகற்றி களைபிடிங்கி வாழ்வோம் !
மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()