முச்சந்தி

நீதியரசர்களுக்கு லஞ்சம் வழங்க ஜனாதிபதி முயற்சி; குற்றம்சாட்டுகிறார் ரவூப் ஹக்கீம்

உயர் நீதிமன்றம்,மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பாமல் ஜனாதிபதி வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதுடன் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையைஅதிகரித்து ஜனாதிபதி தங்களுக்கு தேவையான நீதியரசர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கிறார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீண்டும் நீடித்திருக்கிறது. அரசாங்கத்தின் தேவைக்கே அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டு வருகிறது. அதனால் அடுத்த மாதத்திலாவது இதனை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் அரசாங்கம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையைஅதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருவது நீதித்துறைக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது.அதேநேரம் அவ்வாறான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்க ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். எனினும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளி்ட்ட பல சட்டத்தரணிகள் சங்கங்கள் ஜனாதிபதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம்,உயர் நீதிமன்றத்தில் தலா 4 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பல மாதங்களாகியும் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.இந்த நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும். ஆனால் ஜனாதிபதி வேண்டுமென்றே இதனை மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் அவர் அரசியலமைப்பை மீறியுள்ளார். அதேநேரம் நீதியரசர்கள் பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

ஜனாதிபதி தங்களுக்கு தேவையான நீதியரசர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கிறார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button