டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண குறுக்கு வழியில் செல்லும் அநுர

ஏற்றுமதியாளர்கள் டொலரை ரூபாவுக்கு மாற்றுவதற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் காலத்தை 30 நாட்களாக குறைத்து ரூபா வீழ்ச்சியடைவதை பலவந்தமாக கட்டுப்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கின்றார் குறுக்கு வழிகளால் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஜனாதிபதி முற்பட்டால் நாடு பயங்கரமான தொரு நிலைக்கு செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துக்கு மே மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எழுதிய கடிதத்தில், ஏற்றுமதியாளர்கள் டொலரை மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருக்கும் 90 நாட்கள் என்ற காலத்தை மேலும் இலகுபடுத்தி, ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்காெடுக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் என்ற கால நீடிப்பை ஜனாதிபதி 30 நாட்களாக குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்.
நாட்டில் டொலர் நெருக்கடி இருப்பதாலேயே 90 நாள் நீடிப்பை 30 நாட்களாக குறைக்கவுள்ளனர் . இன்று சந்தையில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்கவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை அவசரமாக எடுத்திருக்கிறார். 90 நாட்கள் என்ற காலத்தை 30 நாட்களாக குறைத்து பலாத்காரமாக டொரை சந்தையிக்கு கொண்டுவந்து ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார். குறுக்கு வழிகளால் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஜனாதிபதி முற்பட்டால் நாடு பயங்கரமான தொரு நிலைக்கு செல்லும் என்றார்.
![]()