இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் ‘மகா சூத்திரதாரி’ எவரும் இல்லை; இது ஒரு பாதுகாப்பு குறைபாடே!

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட மிக மோசமான ‘பாதுகாப்பு குறைபாடு’ மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையின் விளைவே தவிர, இதன் பின்னணியில் எந்தவொரு தனிப்பட்ட ‘மகா சூத்திரதாரியும்’ கிடையாது  என்று பிரபல சட்டத்தரணி மைத்திரி குணரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் நிலவும் குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பலவீனங்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்தக் கோரத் தாக்குதல் நடப்பதற்கு 21 நாள்களுக்கு முன்பே, குறிப்பிட்ட ஒரு நாளில் இவ்வாறானதொரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்று அரச புலனாய்வுச் சேவைக்கு மிகத் துல்லியமான இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.

புலனாய்வுப் பிரிவினர் அந்தத் தகவலை உடனடியாகப் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பியிருந்தனர். அவர் மூலமாக அந்தக் கோப்பு அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபர், அந்த அத்தியாவசிய முக்கியத்துவம் வாய்ந்த கோப்பை வெறும் ‘தகவலுக்காக’ எனக் குறிப்பிட்டுத் தனது கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தாரே தவிர, தேவாலயங்களையோ அல்லது பொதுமக்களையோ பாதுகாப்பதற்கான எந்தவொரு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” – என்றார்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தார் என்று எழும் வாதங்களை தர்க்கரீதியாக அணுகிய மைத்திரி குணரத்ன,

“சுரேஷ் சலேதான் இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தீட்டினார் என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் கூட, சர்வதேச ரீதியாகக் கிடைத்த துல்லியமான எச்சரிக்கத் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்திருந்தால், இந்தத் தேசியப் பேரழிவைத் தடுத்து 270 இற்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.” – என்றார்.

“தற்போதைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துச் சுயாதீன விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் இந்தத் தாக்குதலின் ‘மகா சூத்திரதாரி’ என அடையாளப்படுத்தப்படுபவர்கள் அரசியல் தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த ஒட்டுமொத்த விவகாரமும் அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்பற்ற தன்மையால் நேர்ந்த ஒரு பேரழிவே என்று சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button