Apache உலங்குவானூர்தி விவகாரம் ; ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் AH-64 Apache உலங்குவானூர்தி ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்த பதிலடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த இரு இராணுவப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா அவசியமாக பதிலளிக்க வேண்டும்” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவ மற்றும் கண்காணிப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா துல்லியத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளான குஹிஸ்டாக், சிரிக் மற்றும் மினாப் உள்ளிட்ட பகுதிகளில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், Apache உலங்குவானூர்தி திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது வேறு காரணங்களால் விபத்துக்குள்ளானதா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![]()