நேற்று வரை 300 க்கும் மேல் எலும்புக் கூடுகள் அடையாளம்; செம்மணியில் அதிகளவில் சிறுவர்கள் கொன்று புதைப்பு!; தினமும் எலும்புக் கூடுகள் தோண்டி எடுப்பு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை முன்னூறுக்கும் அதிகமான மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் கணிசமானவையாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் என்பு கூட்டு தொகுதிகளாக காணப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் பல சிறுவர்களும் குழந்தைகளினதும் என்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்படலாமெனவும் இதன் மூலம் இங்கு குடும்பம் குடும்பமாக பெருமளவானோர் கொல்லப்பட்டார்களா?என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் நாளாந்தம் மீட்கப்படும் மனித என்பு தொகுதிகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் மனித என்பு கூட்டு தொகுதிகள் கணிசமான அளவை பெற்று வருகிறது.
செம்மணி பகுதியில் இதுவரை சிறுவர்களின் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் கைப் பொம்மை, காற்சங்கிலி, சிறு வளையல், பால் போச்சி போத்தல், பாதணிகள், சிறுமிகளின் ஆடைகள் உள்ளிட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பிலான சான்றுப்பொருள்களும் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
பெரிய மனித என்பு கூட்டு தொகுதியுடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட குழந்தையுடன் மனித என்பு கூட்டு தொகுதி உட்பட பல பச்சிளம் குழந்தைகளின் என்பு கூட்டு தொகுதிகள் செம்மணியில் அகழ்ந்து மீட்டெடுக்கப்பட்டமை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக செம்மணி அகழ்வு பகுதி காணப்படும் நிலையில் அது தொடர்பான எதிர்ப்பார்ப்பு எகிறி வரும் நிலையில், அவற்றில் நாளாந்தம் கணிசமானவையாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் மனித என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதேவேளை கடந்த வருடம் சிறுவர் தினத்தையொட்டி செம்மணி மனித புதைகுழியில் மீட்டெடுக்கப்பட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
![]()