இலங்கை

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு : அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு ஆதரவு

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இடம்பெற்றதை வலியுறுத்தியும், இது தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்கள், முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன, பாதுகாப்பு வலயங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச அறிக்கைகள் உள்ளன.

அத்துடன் அமரர் ஆயர் இராயப்பு யோசப்பு ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் போர்க்காலக் கொடுமைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுதல், மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், மற்றும் பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த பரந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

உண்மையை நிலைநாட்டுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்தல், மற்றும் பொறுப்பானவர்களைப் பொறுப்பேற்கச் செய்தல் ஆகியவை உண்மையான நல்லிணக்கத்திற்கும் நீடித்த அமைதிக்கும் இன்றியமையாத முன்நிபந்தனைகள்” என தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், உள்ளிட்ட மத, சமூக மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button