இலங்கை

தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்!

ஆளுங்கட்சியானது தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி, கிராமங்களுக்குள் கூடச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு அரசாங்கத்திற்குத் தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை அளவிட்டுக் காட்டுமாறும் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கூறியதாவது.

“டொலரின் பெறுமதியைக் கட்டுப்படுத்தியதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது. ஆனால், இன்று டொலரின் பெறுமதி 348 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சுமார் நூறு சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

அரசாங்கத்தால் டொலர் பெறுமதி உயர்வைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி, எமது நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறைக்கு அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்னர் 20 சதவீத வரியை விதித்திருந்ததுடன், கடந்த வாரம் மேலும் 12.5 சதவீத வரியை விதித்துள்ளது.

இதைப் பற்றி அரசாங்கத்தில் எவரும் பேசுவதில்லை. ஆடைத் துறை மட்டுமன்றி, எமது நாட்டின் இறப்பர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளையும் அமெரிக்காவே அதிகம் கொள்வனவு செய்கிறது.

புதிய வரி விதிப்பால் நாட்டின் இறப்பர் விலைக்கும் ஆடைத் தொழில்துறைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button