முச்சந்தி

தற்போதைய அரசு கோட்டாவை விட மோசமான விளைவைச் சந்திக்கும்- சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை!

“முறையான திட்டங்கள் இல்லாத தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்திற்கு நேர்ந்ததை விடவும் மோசமான மக்கள் எதிர்ப்பையும் விளைவுகளையும் சந்திக்கும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எச்சரித்துள்ளார்.

“எவ்வாறெனினும், நாட்டைச் சரியான பாதையில் கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது குழுவினர் காத்திரமான ஆதரவை வழங்கத் தயாராக உள்ள போதிலும், நாம் ஒருபோதும் இந்த அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் மீது எவ்வளவு நியாயமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்வதாக ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மார்தட்டி வருகின்றனர். ஆனால், அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் இன்று நடைமுறையில் சாத்தியமாகவில்லை.

 

துறைமுக இறக்குமதி விலையிலேயே நாட்டு மக்களுக்கு எரிபொருளை வழங்க முடியும் என மேடைகளில் முழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஆட்சிக்கு வந்த பின்னரே அதன் நடைமுறைச் சிக்கல்களையும் கடினத்தன்மையையும் உணர்ந்துள்ளார். அன்று மேடைகளில் பேசிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இன்று எங்குமே இல்லை.

 

மறுபுறம், அரசாங்க மருத்துவமனைகளில் கடுமையான உயிர்காக்கும் மருந்துத் தட்டுப்பாடும், அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறையும் நிலவுகின்றது. இந்த இருண்ட பின்னணியில், சுகாதாரத் துறையை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலை ஆகும். அவ்வாறு ஏதேனும் சாதித்திருந்தால் அது குறித்து அரசாங்கம் மக்களுக்குத் தரவுகளுடன் தெளிவுபடுத்த வேண்டும் என நான் சவால் விடுக்கின்றேன்.

 

தற்போது உள்ளூராட்சி அமைப்புகள் முதல் மத்திய அரசாங்கம் வரை முழு அதிகாரமும் தேசிய மக்கள் சக்தியிடமே தங்கியுள்ளது. ஒன்பது மாகாணங்களுக்கும் ஆளுநர்களை நியமித்ததும் தற்போதைய ஜனாதிபதியே ஆவார். சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகள் மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டிய போதிலும், தற்போது ஆளுநர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்பவே அவை இயங்குகின்றனவே தவிர மக்களுக்கு எந்தச் சேவையும் கிடைப்பதில்லை.

 

அரசாங்கத்தின் மீதான தற்போதைய மக்கள் செல்வாக்கை அளவிடுவதற்கு தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்குச் சவால் விடுக்கின்றேன். இத்தேர்தல் நடத்தப்பட்டால் 9 மாகாணங்களிலும் அரசாங்கம் பாரிய தோல்வியைச் சந்திப்பது உறுதி. தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 3 சதவீதத்திற்கும் கீழ் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும், விவசாய அமைப்புகளின் ஊடாகவே அதற்கான நிதிகள் பலவந்தமாகத் திரட்டப்படுகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு பற்றிப் பேசும் இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சொந்தச் சகோதரரே அண்மையில் போதைப்பொருளுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நான் இங்கு அம்பலப்படுத்துகின்றேன். அரசாங்கத்தில் உள்ள ‘மலர்க்கன்றுகள்’ அனைத்தும் தற்போது ‘களைகளாக’ மாறிவிட்டன.

 

விவசாயிகளின் அவல நிலை குறித்துப் பார்ப்போமானால், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா உர மானியத்தை 30,000 ரூபாவாக உயர்த்தி வழங்குவதாக இந்த அரசு கூறியிருந்த போதிலும், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இதுவரை இந்த மானியம் சென்றடையவில்லை. நெற்பயிருக்குத் தேவையான சரியான நேரத்தில் உரம் வழங்கப்பட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 90 கிலோ உரம் தேவைப்படும் நிலையில் அரசாங்கம் 50 கிலோவை மாத்திரமே வழங்குகின்றது. உலகப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி இரண்டு மூடை உரத்தையே வழங்குகின்ற போதிலும், விவசாயிகளிடம் ஐந்து மூடை உரத்திற்கான முழுப் பணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய விவசாயிக்கு 130 ரூபா வரை செலவாகின்றது. ஆனால், சந்தையிலுள்ள இடைத்தரகர்களிடம் 95 ரூபாவிற்கே நெல்லை விற்க வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் அறுவடைச் செலவுகளும் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு விவசாயிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யவே அரசாங்கம் இரகசியமாக முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. மாறாக, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் மிக விரைவில் கட்சி மாறுவதற்குத் தயாராகி வருவதாகத் நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன. இதனால்தான், தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடுக்கும் அவசர சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் திரைமறைவில் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்குத் தங்களது 159 பெரும்பான்மை பலத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லை. தைரியமிருந்தால் இந்தச் சட்டமூலத்தின் மீது நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன்.

 

அரசாங்கத்திற்கு முறையான திட்டங்கள் இல்லாததால் தன்னிச்சையாக எரிவாயு, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர். திறமையான துறைசார் அதிகாரிகளின் ஆலோசனைகளை இந்த அனுபவமற்ற, அடாவடித்தனமான ஆட்சியாளர்கள் ஏற்பதில்லை.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button