இலங்கை

வெருகலில் 41ஆம் ஆண்டு வட்டவன் படுகொலை நினைவேந்தல்: நீதிக்காக ஏங்கும் உறவுகள் அஞ்சலி

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்திற்குட்பட்ட வட்டவன் கிராமத்தில், கடந்த 1985ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட கொடூர கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு   உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வட்டவன் படுகொலை நினைவேந்தல் பகுதியில் திரண்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான வெருகல் பிரதேசம் சொல்லொணாத் துயரங்களையும், இடப்பெயர்வுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த ஒரு பகுதியாகும்.

இதில் மிகக் கொடூரமான வடுவாக 1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி நிகழ்ந்த வட்டவன் கூட்டுப் படுகொலை பார்க்கப்படுகிறது.

கடந்த 1985 ஜூன் 3 அன்று வெருகல் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தரப்பினரால், இப்பகுதியின் பல கிராமங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

ஆரிப்பு, பூநகர், பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் மற்றும் வட்டவன் உள்ளிட்ட பல கிராமங்கள் இதன்போது அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் இன்றும் அச்சத்துடன் நினைவு கூருகின்றனர்.

இக்கோரத் தாக்குதல்களால் பீதியடைந்த மக்கள், தங்களின் உயிர்களைக் காத்துக் கொள்ள உடமைகளைத் துறந்து அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

எனினும், வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் அக்கணத்தில் தப்பிச் செல்ல முடியாமல் கிராமத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். கர்ப்பிணித் தாய், சிறுவர்கள் உட்பட 10 பேர் கொடூரமாகக் கொலை தாக்குதல்காரர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், அவர்கள் அனைவரும் ஒரு வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்தனர்.

எனினும், அங்கு புகுந்த ஆயுததாரிகள், உள்ளே இருந்தவர்களை மிகக் கொடூரமான முறையில் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடல்களையும் அங்கேயே எரித்து சாம்பலாக்கியதாக அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவத்தில் ஒரு கர்ப்பிணித் தாய், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்:

சுபத்திரை (கர்ப்பிணித் தாய்)

கார்த்திகேசு

கார்த்திகேசு கனகம்மா

ரங்கராசா அமராவதி

ரங்கராசா ராசா

ரங்கராசா சரஸ்வதி

கேதுபாலுப்பிள்ளை

அன்னக்கிளி

சின்னையா கிட்ணப்பிள்ளை

இராசையர் (ஓடாவியார்)

இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட சுடர்களின் உருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.

தங்கள் கண்முன்னே உறவுகளைப் பறிகொடுத்து 41 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவுகள் இதன்போது ஆதங்கம் வெளியிட்டனர்.

போரினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை சர்வதேசமும் அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும் என நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button