முச்சந்தி

ஈரான் போரும் உக்ரைன் போரும்; அமெரிக்க டிரம்ப் அரசின் முரண்நிலை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இன்று உலகம் பலதுருவ அரசியல் அமைப்பை நோக்கி நகர்கிறது. சீனா – ரஷ்யா அணியும், அமெரிக்கா – நேட்டோ அணியும் புதிய அதிகார மையங்களாக உருவாகின்றன. இந்த மாற்றத்தின் மையத்தில் ஈரான் மற்றும் உக்ரைன் போர்கள் உள்ளன. ஈரான் போரும் உக்ரைன் போரும் வெறும் பிராந்திய மோதல்கள் அல்ல. அவை உலக அதிகார மறுசீரமைப்பின் அறிகுறிகள். இந்த சூழலில் டிரம்பின் அரசியல் அணுகுமுறை, அமெரிக்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை மட்டுமல்லாது, உலக அரசியலின் எதிர்கால திசையையும் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது)
 
உலக அரசியலின் தற்போதைய மிகப்பெரிய இரு மோதல்களாக ஈரான் தொடர்பான மத்திய கிழக்கு பதற்றமும், ரஷ்யா – உக்ரைன் போரும் உருவெடுத்துள்ளன. இந்த இரு மோதல்களும் தனித்தனியான பிராந்தியப் பிரச்சினைகளாக மட்டும் இல்லாமல், புதிய உலக அதிகார சமநிலையை நிர்ணயிக்கும் சக்திப் போட்டிகளாக மாறியுள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் ஜனாதிபதியின் தற்போதைய அரசியல் மையப் பாத்திரமுமான டொனால்ட் டிரம்பின் அரசியல் அணுகுமுறை உலகளாவிய விவாதமாகியுள்ளது.
தற்போதய டிரம்ப் அரசு அரசியல் நடைமுறை, பாரம்பரிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறுபட்டது. அமெரிக்காவே முதலில்
(“America First”) என்ற கோஷத்தை முன்வைத்த அவர், உலக காவலாளி என்ற அமெரிக்காவின் பாத்திரத்தை குறைத்து, நேரடி அமெரிக்க நலன்களை முன்னிறுத்தும் அணுகுமுறையை கடைப்பிடித்தார். இதன் தாக்கம் ஈரான் மற்றும் உக்ரைன் தொடர்பான அவரது நிலைப்பாடுகளில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
ஈரானில் டிரம்பின் அணுகுமுறை:
டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தமான JCPOA-வில் இருந்து விலகியது. அந்த ஒப்பந்தம் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் முதலில் உருவாக்கப்பட்டிருந்தது. டிரம்ப் அதனை “அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் பலவீனமான ஒப்பந்தம்” என விமர்சித்தார்.
அதன் பின்னர், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டது. ஈரானிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றது.
டிரம்பின் ஆதரவாளர்கள், இந்த அணுகுமுறை ஈரானின் பிராந்திய செல்வாக்கை கட்டுப்படுத்த உதவியதாகக் கூறுகின்றனர். ஆனால் விமர்சகர்கள், அது மேற்கு ஆசியத்தை மேலும் நிலையற்றதாக்கியதோடு, ஈரானை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கமாக தள்ளியதாகக் கருதுகின்றனர்.
ஈரானை அழுத்தத்தின் மூலம் கட்டுப்படுத்துதல்:
மத்திய கிழக்கு அரசியலில் “ஈரான்” என்ற பெயர் ஒலிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், உலக அரசியல் அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் அதனை நோக்கி கவனம் செலுத்துகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானை எதிர்கொண்ட விதம் உலக அரசியலின் முக்கிய திருப்பமாக அமைந்தது. “அழுத்தத்தின் மூலம் கட்டுப்படுத்துதல்” என்ற அணுகுமுறையுடன் செயல்பட்ட டிரம்ப் அரசு, ஈரானை தனிமைப்படுத்தும் தீவிர அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
டிரம்பின் முதலாவது ஆட்சியின் ஆரம்பத்திலிருந்தே, முன்னாள் ஒபாமா நிர்வாகம் உருவாக்கிய அணு ஒப்பந்தம் குறித்து கடுமையான எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தினார். 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “Joint Comprehensive Plan of Action (JCPOA)” எனப்படும் அணு ஒப்பந்தம், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் பங்கேற்பில் உருவானது. ஆனால் டிரம்ப் இதனை “அமெரிக்காவுக்கு மோசமான ஒப்பந்தம்” எனக் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியபோது, உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அதன் பின்னர் அழுத்தத்தின் மூலம் கட்டுப்படுத்துதல் ( “Maximum Pressure Campaign” ) என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எண்ணெய் ஏற்றுமதி, வங்கி பரிவர்த்தனை, வெளிநாட்டு முதலீடு போன்ற துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தின் பார்வையில், ஈரான் என்பது வெறும் ஒரு நாடாக அல்ல, மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்திற்கும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் எதிரான முக்கிய சக்தியாகவே கருதப்பட்டது. குறிப்பாக லெபனானில் ஹெஸ்பொல்லா, யேமனில் ஹூதி இயக்கம், ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்ட ஷியா ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றிற்கு ஈரான் வழங்கிய ஆதரவு, அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்க வைத்தது.
உக்ரைன் போரில் டிரம்பின் நிலை:
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியபோது டிரம்ப் அதிகாரத்தில் இல்லை என்றாலும், அவரது அரசியல் செல்வாக்கு அமெரிக்கக் கொள்கையில் தொடர்ந்து காணப்படுகிறது. டிரம்ப் பலமுறை, “நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் நடந்திருக்காது” என்று கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு அளிக்கப்படும் பெரும் இராணுவ மற்றும் நிதி உதவிகளை அவர் சந்தேகத்துடன் அணுகியுள்ளார். அமெரிக்க வரிப்பணத்தை முடிவில்லாத வெளிநாட்டு போர்களில் செலவிட வேண்டாம் என்பதே அவரது அரசியல் வாதமாகும். இந்த அணுகுமுறை, அமெரிக்க மக்களிடையே அதிகரித்து வரும் “போர் சோர்வு” மனநிலையுடன் தொடர்புடையதாகும்.
அதேசமயம், டிரம்பின் கருத்துக்கள் நேட்டோ கூட்டணிக்குள் பதற்றத்தையும் உருவாக்கின. ஐரோப்பிய நாடுகள் தங்களது பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனால் அமெரிக்கா – ஐரோப்பா உறவுகளில் புதிய கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன.
24 மணிக்குள் போரை முடிப்பேன்!
உக்ரேன் போரைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு தருணத்திலும் டிரம்ப் வலியுறுத்தும் முக்கிய கருத்து — “நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் நடந்திருக்காது” என்பதாகும். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் “24 மணிநேரத்தில் போருக்கு முடிவு காண்பேன்” என்றும் அவர் பலமுறை கூறியுள்ளார்.
இந்தக் கருத்து வெறும் தேர்தல் அரசியலுக்கான வாசகமா அல்லது உண்மையான வெளியுறவு கொள்கை நோக்கமா என்பது விவாதத்திற்குரியது. இருப்பினும், டிரம்பின் அணுகுமுறையில் ஒரு முக்கிய அம்சம் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா நீண்டகால வெளிநாட்டு போர்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற தேசியவாத அரசியல்.
உக்ரேனுக்கு போரில் அமெரிக்கா வழங்கி வரும் பில்லியன் கணக்கான டொலர் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை டிரம்ப் அணியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “அமெரிக்க வரிப்பணத்தை வெளிநாட்டு போரில் வீணடிக்கக் கூடாது” என்பது அவர்களின் வாதமாகும்.
ரு போரும் உலக அரசியலும்:
ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்கள் வெவ்வேறு புவியியல் பகுதிகளில் நடந்தாலும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, நேட்டோ, மத்திய கிழக்கு கூட்டணிகள் போன்ற சக்திகள் அனைத்தும் இந்தப் போர்களின் பின்னணியில் உள்ளன.
டிரம்பின் அணுகுமுறை, பாரம்பரிய அமெரிக்க உலக ஆதிக்க அரசியலை மாற்றும் முயற்சியாக சிலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் மற்றவர்கள், அது அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை பலவீனப்படுத்தும் அபாயகரமான தேசியவாதமாக கருதுகின்றனர்.
இன்று உலகம் பலதுருவ அரசியல் அமைப்பை நோக்கி நகர்கிறது. சீனா – ரஷ்யா அணியும், அமெரிக்கா – நேட்டோ அணியும் புதிய அதிகார மையங்களாக உருவாகின்றன. இந்த மாற்றத்தின் மையத்தில் ஈரான் மற்றும் உக்ரைன் போர்கள் உள்ளன. டிரம்பின் அரசியல் மீளுருவாக்கம், இந்த உலக அரசியல் மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகும்.
ஈரான் போரும் உக்ரைன் போரும் வெறும் பிராந்திய மோதல்கள் அல்ல. அவை உலக அதிகார மறுசீரமைப்பின் அறிகுறிகள். இந்த சூழலில் டிரம்பின் அரசியல் அணுகுமுறை, அமெரிக்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை மட்டுமல்லாது, உலக அரசியலின் எதிர்கால திசையையும் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது.
போரின் மூலம் அமைதி உருவாகாது. ஆனால் அதிகார அரசியலின் மூலம் உலகம் தொடர்ந்து புதிய மோதல்களுக்குள் தள்ளப்படுகிறது. இந்த உண்மையை உணராமல் உலக சக்திகள் முன்னேறினால், எதிர்கால மனித சமூகம் மேலும் ஆபத்தான நிலையினை எதிர்கொள்ள நேரிடலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button