முச்சந்தி

காசா சென்ற அவுஸ்திரேலிய தொண்டர்கள் இஸ்ரேலிய படையால் கடலில் துஷ்பிரயோகம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசாவின் கடல்வழி முற்றுகையை மீறி உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 40 நாடுகளைச் சேர்ந்த 430 தொண்டர்களை இஸ்ரேலிய படைகள் சிறைப்பிடித்து, படகில் வைத்து அடித்ததுடன், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். மிகக் கொடூரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தொண்டர்களை இஸ்ரேலின் அமைச்சர் ‘இத்தாமர் பென்-ஜிவிர்’ தரையில் அமர வைத்து அவமதித்த காணொளி வெளியாகி பெரும் சர்வதேச கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது)

பாலஸ்தீனத்தில் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற சர்வதேச தொண்டர் குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளன.

அவுஸ்திரேலிய தொண்டர்கள் கைது:

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கக் கடலில் சென்ற ‘குளோபல் சுமுத்’ (Global Sumud) மிதவைக் கப்பல் குழுவில் பயணித்த அவுஸ்திரேலியர்கள், சர்வதேச கடற்பகுதியில் இஸ்ரேலிய படையினரால் இடைமடைந்து கைது செய்யப்பட்டனர். இந்தியா திரும்புவதற்கு முன்னர் இஸ்ரேலிய படைகளால் தாங்கள் கடலில் கடுமையான துன்புறுத்தல்களுக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளானதாக அவுஸ்திரேலிய தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முக்கிய காசாவின் கடல்வழி முற்றுகையை மீறி உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 40 நாடுகளைச் சேர்ந்த 430 தொண்டர்களை (11 அவுஸ்திரேலியர்கள் உட்பட) இஸ்ரேலிய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் போன்ற பகுதிகளுக்கு திரும்பிய தொண்டர்கள், தங்களை இஸ்ரேலிய படைகள் சிறைப்படகில் வைத்து அடித்ததுடன், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு அரசியல் ரீதியான பலத்த கண்டனம் எழுந்துள்ளது.

மிகக் கொடூரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தொண்டர்களை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் ‘இத்தாமர் பென்-ஜிவிர்’ (Itamar Ben-Gvir) தரையில் அமர வைத்து அவமதித்த காணொளி வெளியாகி பெரும் சர்வதேச கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அநாகரிகமான செயல் இஸ்ரேலின் விழுமியங்களுக்கு எதிரானது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும், இந்த நடவடிக்கை “அதிர்ச்சியளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ‘பென்னி வோங்’ (Penny Wong) ஆகியோரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்

குளோபல் சுமுத் கப்பல் வழிமறிப்பு:

மனிதாபிமான உதவியை தடுத்து சர்வதேச தன்னார்வ தொண்டர்கள் இஸ்ரேலிய படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் மனிதாபிமான உதவிகளும் அரசியல் முற்றுகைகளும் மோதிக்கொள்ளும் இடமாக காசா பகுதி கடந்த பல ஆண்டுகளாக மாறியுள்ளது. போரால் சிதைந்த மக்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும் நேரங்களில், அவற்றை கொண்டு செல்லும் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூட பல்வேறு தடைகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில், “குளோபல் சுமுத்” எனப்படும் உதவிக் கப்பல் வழிமறிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“சுமுத்” என்பது அரபு மொழியில் “உறுதியான நிலைத்தன்மை” அல்லது “எதிர்ப்பை தாங்கும் மனவலிமை” என்பதைக் குறிக்கும் சொல். இந்தக் கப்பலின் பெயரே அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இந்தக் கப்பலை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. உதவிப் பொருட்கள் சோதனை செய்யப்படும் என்ற பெயரில் கப்பல் வழிமறிக்கப்பட்டதோடு, அதில் இருந்த தொண்டர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. சிலர் கைது செய்யப்பட்டதாகவும், சிலர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

காசாவில் உணவு மருத்துவ நெருக்கடி:

காசா பகுதி பல மாதங்களாக கடுமையான போர், உணவுத் தட்டுப்பாடு, மருத்துவ நெருக்கடி மற்றும் மனிதாபிமான பேரழிவை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைதித் தொண்டர்கள், மருத்துவ உதவி குழுக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடல் மற்றும் நில வழிகளால் உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர். அவற்றில் அவுஸ்திரேலியர்களும் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், காசாவை நோக்கிச் சென்ற சில உதவிக் கப்பல்கள் மற்றும் செயற்பாட்டாளர் குழுக்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட தொண்டர்கள் மீது விசாரணை என்ற பெயரில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், சிலர் உடல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தச் சம்பவம் அவுஸ்திரேலிய சமூகத்திலும் எதிரொலியை உருவாக்கியுள்ளது. மனிதாபிமான உதவியை குற்றமாக பார்க்க முடியாது என்றும், போர் பாதித்த மக்களுக்கு உதவ முயற்சித்தவர்களை அவமதிப்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் பல சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சில அரசியல் செயற்பாட்டாளர்கள், “காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து கொண்டு செல்ல முயற்சித்தவர்களை கைது செய்வது மனிதாபிமான பணிகளையே அச்சுறுத்தும் செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் படி, போரின்போது பொதுமக்களுக்கு உதவி வழங்கும் மனிதாபிமான அணுகலைத் தடுக்கக் கூடாது என்பது அடிப்படை கோட்பாடாகும். எனினும், காசா முற்றுகை மற்றும் உதவிக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தக் கோட்பாடுகள் நடைமுறையில் மதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

அத்துடன் இந்தச் சம்பவம் வெறும் கடற்படை நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முனையும் சர்வதேச மனிதாபிமான முயற்சிகளை அரசியல் மற்றும் இராணுவ அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் செயலாக பலரும் இதைப் பார்க்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் பட்டினியிலும் மருத்துவ பற்றாக்குறையிலும் தவிக்கும் சூழலில் உதவி அனுப்பும் முயற்சிகள் தடுக்கப்படுவது மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுகின்றன.

சர்வதேச மனித உரிமை சட்டங்களும் ஜெனீவா ஒப்பந்தங்களும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மறுப்பதை கடுமையாக எதிர்க்கின்றன. ஆயினும், காசா முற்றுகை தொடர்பான விவகாரங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் எவ்வளவு மதிக்கப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. “குளோபல் சுமுத்” கப்பல் சம்பவம் இந்த முரண்பாட்டை மீண்டும் உலகின் முன் கொண்டுவந்துள்ளது.

பல மனித உரிமை அமைப்புகளும் அரசியல் விமர்சகர்களும், மனிதாபிமான உதவிகளை “பாதுகாப்பு அச்சுறுத்தல்” எனக் கூறி தடுக்க முயல்வது ஒரு அபாயகரமான முன்னுதாரணம் என எச்சரிக்கின்றனர். இது எதிர்காலத்தில் உலகின் பிற மோதல் பகுதிகளிலும் உதவி அமைப்புகள் செயல்பட முடியாத சூழலை உருவாக்கும் என்ற அச்சமும் உள்ளது.

மற்றொரு பக்கம், இஸ்ரேல் தனது பாதுகாப்பு தேவைகளை முன்வைத்து கடற்படை நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. காசாவுக்கு செல்லும் பொருட்கள் ஆயுதக் குழுக்களிடம் சென்று சேரக்கூடும் என்பதே அதன் முக்கிய வாதமாகும். ஆனால், சர்வதேச பார்வையாளர்கள் பலர், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை கூட இவ்வாறு தடுக்குவது அளவுக்கு மீறிய நடவடிக்கை எனக் கருதுகின்றனர்.“குளோபல் சுமுத்” சம்பவம் உலக அரசியலில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
போரின்போதும் மனிதாபிமான உதவிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரு சமூகத்தின் குழந்தைகள் பசியால் தவிக்கும் வேளையில், அவர்களுக்கு உதவி செய்ய முனையும் தொண்டர்களைத் தடுத்து நிறுத்துவது மனிதநேயத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் மோதல்களும் பாதுகாப்பு அச்சங்களும் இருந்தாலும், மனித உயிர்களின் மதிப்பே அனைத்திற்கும் மேலானதாக இருக்க வேண்டும் என்பதே உலக மனிதாபிமானத்தின் அடிப்படை கொள்கையாகும்.

சர்வதேச விசாரணை தேவை :

அதனால், “குளோபல் சுமுத்” கப்பல் வழிமறிப்பு சம்பவம் ஒரு தனிப்பட்ட கடற்படை நடவடிக்கை அல்ல; அது மனித உரிமைகள், சர்வதேச சட்டம், அரசியல் அதிகாரம் மற்றும் மனிதநேய பொறுப்பு ஆகியவற்றுக்கிடையிலான மோதலின் வெளிப்பாடாகும். உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இத்தகைய சம்பவங்களில் அமைதியாக இருப்பதை விட, மனிதாபிமான உதவிகளுக்கான பாதுகாப்பான வழிகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் மேலும் ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. காசா போர் என்பது வெறும் இராணுவ மோதல் மட்டுமல்ல. அது உலக மனசாட்சியை சோதிக்கும் மனிதாபிமான நெருக்கடியும் ஆகும். ஆயுதங்களுக்கும் அரசியல் கூட்டணிகளுக்கும் அப்பால், மனித உயிர்களின் மதிப்பு முக்கியமா என்ற கேள்வி இன்று உலக நாடுகளின் முன் நிற்கிறது.

காசாவுக்குச் செல்லும் உதவிப் பயணங்களில் பங்கேற்கும் தொண்டர்கள், அரசியல் இலாபத்திற்காக அல்ல, உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற மனித நேய உணர்வுடன் செயல்படுகின்றனர். அவர்கள்மீது நடைபெறும் துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படையான சர்வதேச விசாரணை தற்போது அவசியமாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button